முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாட்களாக அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு கதி என்ன?

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 2 - அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மாயமானது. இரண்டு நாட்களாகியும் அந்த ஹெலிகாப்டர் பற்றி தகவல் இல்லை. ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க முடியாததால் டோர்ஜி கதி என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. இதனிடையே ஹெலிகாப்டரை தேடும் பணி பல்வேறு சிரம்களுக்கு மத்தியில் நீடிக்கிறது.
அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு. இவர் இம்மாநிலத்தின் தவாங் என்ற பகுதியில் இருந்து தலைநகர் இட்டாநகருக்கு ஹெலிகாப்டரில் நேற்று முன்தினம் காலை 9.50 க்கு புறப்பட்டார். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டர் மாயமானது. அதற்கான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இட்டாநகரில் ஹெலிகாப்டர் காலை 11.30 க்கு தரை இறங்கியிருக்க வேண்டும். ஆனால் வெகுநேரம் ஆகியும் தரையிறங்கவில்லை. இதனால் மாநிலத்தில் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த ஹெலிகாப்டர் பூட்டானில் இறங்கியதாகவும், முதல்வர் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதுவும் உண்மை இல்லை என்பது நேற்று காலையில் தெரியவந்தது. இதுபற்றி பூட்டானின் ட்ராஷியாங்சே மாநிலத்தின் துணை கமிஷனர் கூறுகையில், இந்திய ஹெலிகாப்டர் எங்கள் பகுதியில் தரையிறங்கியதாக தகவல் இல்லை என்று மறுத்தார். ஹெலிகாப்டரை தேடும் பணியில் எங்கள் படையினரையும் மக்களையும் ஈடுபடுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார். ஆனால் நேற்று மோசமான வானிலை காரணமாக தேடும் பணியும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் கூட மனம் தளராமல் விமானப்படை வீரர்களும் தேடுதல் குழுவினரும் தீவிரமாக தேடினார்கள். ஆனால் நேற்று இரவுவரை டோர்ஜி பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. எனவே இந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க செயற்கைகோள் உதவியுடன் தேடுவதற்காக இஸ்ரோவின் உதவியும் நாடப்பட்டது. இந்த நிலையில் அருணாச்சல் கவர்னரிடம் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். முதல்வர் டோர்ஜி குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர் சோனியா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். பூட்டான் பிரதமர் ஜிக்மேயுடன் தொடர்புகொண்டு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேடும் பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். ஹெலிகாப்டர் விமானம் காட்டுப் பகுதியில் விழுந்ததா? அல்லது வேறு எங்கும் விழுந்ததா என்பது தெரியவில்லை. இதனால் இம்மாநிலத்தில் பதட்டம் நீடிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். சென்ற ஹெலிகாப்டர் நலமுல்லா வனப்பகுதியில் விழுந்து சுக்குநூறாகி அவர் பலியானார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சபாநாயகர் பாலயோகி இதேபோன்று விமான விபத்தில் பலியானார். இப்படியாக ஹெலிகாப்டர் விபத்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பிரபல நடிகை சவுந்தர்யாவும் ஹெலிகாப்டரில் சென்றபோதுதான் விபத்துக்குள்ளாகி கருகி பலியானார். கடந்த சில ஆண்டுகளில் இதேபோல் 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் ஒய்.எஸ்.ஆர். கதியும் டோர்ஜிக்கு ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. அவர் சென்ற ஹெலிகாப்டரில் அவரது உறவினர்களும் சில அதிகாரிகளும் சென்றிருக்கிறார்கள்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்