முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவருடன் செல்வது பற்றி முடிவு: தர்மபுரி பெண் வாக்குமூலம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால், கணவருடன் வாழ்வது பற்றி முடிவு செய்வேன் என்று ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் தர்மபுரி பெண் வாக்குமூலம் அளித்தார். சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகள் திவ்யாவும் (வயது 20), மகன் மணிசேகரும் கல்லூரி படித்து வருகின்றனர். இந்த நிலையில் திவ்யா கடத்தப்பட்டு, இளவரசன் (வயது 19) என்பவருடன் சட்டவிரோதமாக திருமணம் செய்ததைத் தொடர்ந்து எனது கணவர் நாகராஜ் கடந்த நவம்பர் 7-ந் தேதி தற்கொலை செய்துகொண்டார

இந்த நிலையில் திவ்யா தொடர்பு கொண்டு, இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார். எனது மகள் திவ்யாவை சட்டவிரோதமாக அடைத்திருப்பதாக கருதுகிறேன். எனவே, திவ்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 27-ந் தேதி இந்த வழக்கை நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் விசாரித்தனர். ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில் திவ்யாவும், மனுதாரர் தேன்மொழியும் நீதிபதிகளின் முன்பு ஆஜரானார்கள

அப்போது திவ்யா, நான் விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன்பு தேன்மொழி, திவ்யா, இளவரசன் ஆஜரானார்கள்.

அப்போது நீதிபதிகளிடம் திவ்யா, சமீபத்தில் நடந்த சம்பவங்களால் எனது மனம் மிகவும் குழம்பிப்போய் உள்ளது. எனவே தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு எனது தாயாருடன் தங்க விரும்புகிறேன். இளவரசனுடன் இப்போது பேச விரும்பவில்லை. தாயாருக்கு உடல்நலன் சரியில்லை என்று தகவல் கிடைத்ததால் அவரை பார்ப்பதற்காக சொந்த விருப்பத்தின் பேரில் அவருடன் சென்றேன் என்று பதிலளித்தார்.அதைத் தொடர்ந்து தாயாருடன் திவ்யா தங்கிக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன்பு திவ்யா, இளவரசன் ஆஜரானார்கள். ஆனால் நீதிபதி அறையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று வக்கீல்கள் கேட்டுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து இளவரசன், திவ்யா மற்றும் அவர்கள் தரப்பு வக்கீல்கள் மட்டும் நீதிபதிகள் அறைக்கு அழைக்கப்பட்டனர். திவ்யா, இளவரசனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. சிறிது நேர விசாரணைக்கு பின்பு வழக்கை 3-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தனர்

அதன் பின்னர் வக்கீல்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

திவ்யாவிடம் நீதிபதிகள் கேள்விகள் கேட்டனர். அப்போது அவர், இளவரசன் என்னை எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அவரது தாயாரும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் எனக்கு பழைய சம்பவமும், எனது அப்பாவின் ஞாபகமாகவும் உள்ளது. இப்போது அம்மாவை விட்டுவர முடியவில்லை. அம்மாவையும், தம்பியையும் இழந்துவிடுவேனோ என்ற பயம் உள்ளது. அதனால் அவர்களுடன் வசிக்கிறேன்.

காதல் திருமணத்தை எனது தாயார் ஏற்றுக்கொண்டால், இளவரசனுடன் வாழ்வது பற்றி பின்னர் முடிவு செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony