தவறான பட்டியல் - விளக்கம் கேட்கிறது பாகிஸ்தான்

Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே 31 - பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் பட்டியலின் தற்போதைய நிலை என்ன என்று இந்தியாவிடம் பாகிஸ்தான் விளக்கம் கேட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இத்தகைய செயல்களை செய்துவிட்டு பாகிஸ்தானில் ஓடி பதுங்கிக்கொள்கின்றனர். இத்தகைய தீவிரவாதிகளை பிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா சில மாதங்களுக்கு முன் 50 பேர் அடங்கிய பெயர் பட்டியலை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா நெருக்குதலை கொடுத்து வந்த நேரத்தில் கொடுக்கப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் உள்ள இருவர் இந்தியாவிலேயே இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டது.

பாகிஸ்தானிடம்  கொடுக்கப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்காக மத்திய அரசு கொண்டுவந்தது. இதில் மும்பை தொடர்  குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் தானேயில் தொழில் செய்துவருவதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன. மேலும் ஒருவரும் போலீஸ் காவலில் இருந்து வெளிவந்ததும் தெரியவந்தது. இது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தவறான பட்டியலை வெளியிட்டதற்காக மத்திய அரசுமீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

ஆனால் இதுகுறித்து ஆரம்பத்தில் மவுனம் சாதித்த பாகிஸ்தான் அரசு தற்போது இந்த குளறுபடியையே காரணமாக காட்டி தங்களிடம் கொடுக்கப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியல் சரியானதுதானா என்பதை இந்திய அரசு முதலில் உறுதி செய்துகொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெஹ்மினாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியா எத்தகைய கோரிக்கையை வைத்தாலும் அதை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அளித்த பட்டியலின் தற்போதைய நிலையை இந்தியாதான் விளக்க வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக இந்த பட்டியலில் குளறுபடி இருப்பதாக தெரிந்த உடனேயே அந்த தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ