2ஜி வழக்கு: பெகுரா ஜாமீன் மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.5 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுராவின் ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி, பெகுராவை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்பதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக தெரிவித்தார். அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் உத்தரவின்படியே செயல்பட்டதாகவும், தனக்கும் முறைகேடுகளுக்கும் தொடர்பில்லை என்றும் பெகுரா தரப்பில் வாதாடப்பட்டது. 

ஆனால் பெகுராவுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராசாவின் செயல்பாட்டில் தவறுகள் இருந்தால் அதை பிரதமரிடம் எடுத்துரைக்கும் அதிகாரம் பெகுராவுக்கு உள்ளது. அமைச்சரின் சட்ட விரோத உத்தரவுகளுக்கு கீழ்படிய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்று சி.பி.ஐ. தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷைனி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். 2 ஜி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 2 ம் தேதி கைது செய்யப்பட்ட பெகுரா, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஏப்ரல் 2 ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் கூட்டு சதியாளராக பெகுராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: