முக்கிய செய்திகள்

டீசலுக்கு இரட்டை விலை இல்லை: பிரணாப்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.8 - டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார். புதுடெல்லியில் இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பின் சார்பில் 20 ஆண்டுகளாக இந்தியாவில் அமலில் இருக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

பஸ், லாரி போன்ற பொது போக்குவரத்துகளுக்கு மானிய விலையிலும், கார்களுக்கு மானியம் நீக்கப்பட்ட முழு விலையிலும் டீசல் விற்கும் உத்தேசம் எதுவும் அரசுக்கு இல்லை. அப்படி ஒரு எண்ணமே அரசுக்கு இல்லை. வரி வருவாயில் ஏற்படும் பற்றாக்குறையைச் சமாளிக்க சில தீர்வைகளை அரசு உயர்த்தக்கூடும் என்று சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. அப்படியான எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. தற்போதுள்ள வரி விகிதங்கள் அப்படியே தொடரும். பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும். கட்சிகளுக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்தே செயல்படும் மனநிலையிலேய உள்ளன. 

இந்த பொருளாதார சீர்திருத்தங்களை இன்னமும் நிதித் துறையில் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்புக்களில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்ய வேண்டிய முக்கிய கடமை அரசுக்கு இருக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு பட்டியலிட்டு இருக்கிறது. நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே அவற்றை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். இந்த நிலையில் முக்கிய துறைகளில் அதிகம் முதலீடு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று தொழிலதிபர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். 

பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட நிலையிலும், திட்டமிட்டபடி பொருளாதார வளர்ச்சி காண முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. நம்முடைய அடிப்படை காரணிகள் இன்னமும் வலுவாகவே இருக்கின்றன. நம்முடைய வளர்ச்சியும் திட்டமிட்டபடியே இருக்கிறது. 

நமக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது பணவீக்க விகித அதிகரிப்புதான். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் மக்களின் வாங்கும் சக்தி குறைவதுடன், நாம் அடைய நினைக்கும் பொருளாதார இலக்கை அடைவது சாத்தியமே இல்லாமல் போகலாம். விலை உயர்வு நம்முடைய உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றையும் பாதிக்கலாம். அதனால் வேலை வாய்ப்பு குறையக்கூடும். பொது விநியோக அமைப்பை வலுப்படுத்துகிறோம். தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்து மானிய விலையில் விற்கிறோம். பண சப்ளையை குறைக்க ரிசர்வ் வங்கி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் கடன் மீதான வட்டி விகிதம் கூடுகிறது. இதனால் வளர்ச்சி வேகம் பாதிக்கப்படுகிறது. இருந்தாலும் பெரிய ஆபத்து நேராமல் இருக்க சிறிய சோதனைகளை நாம் தாங்க வேண்டியுள்ளது. 

மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் நாம் இருக்கிறோம். இந்த நிலையை வலுப்படுத்தும் வகையில் தொழில் முதலீடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: