முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மின் பகிர்மான கழகத்துக்கு ரூ.7200 கோடி நஷ்டம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.19 - முந்திய தி.மு.க.அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழகத்துக்கு மின்சாரம் வாங்கியதில் மாதம் ரூ.150 கோடி அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக மின் பகிர்மான கழகம் ரூ.7200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார. அப்போது பேசியதாவது:

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1 யூனிட் மின்சாரம் ரூ.6.035 என்ற விலைக்கு 1,000 மெகாவாட் வாங்கப்பட்டது. ஆனால். ஜெயலலிதா ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.3.85க்கு வாங்கப்பட்டது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.150 கோடி தி.மு.க. ஆட்சியில் அதிகமாக செலவு செய்யப்பட்டது. இதன் விளைவாக முந்தைய அரசு கடந்த 4 ஆண்டுகளில் சரியாக கவனம் செலுத்தாமல் அதிக விலைக்கு முன் கொள்முதல் செய்த காரணத்தால் ரூ.7,200 கோடி மின் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா இதில் முழு கவனத்தையும் செலுத்தி கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.225 கோடி சிக்கனப்படுத்தியுள்ளார். தற்போது வாங்கப்பட்டு வரும் மின்சாரம் ரூ.3.85லிருந்து அதிகபட்சமாக ரூ.4.50க்கு வாங்கினாலும் கூட தமிழகத்திற்கு மின்சார செலவினம் மிச்சம் தான். அதிகபட்சமாக ரூ.4.50 வீதம் 500 மெகாவாட் வாங்கினால் மாதம் ஒன்றுக்கு ஆகும் தொகை ரூ.54 கோடியாகும். இதன்படி முந்தைய அரசு கணக்குப்படி 48 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 54 கோடி வீதம் 2,592 கோடி ஆகிறது. இது 500 மெகாவாட்டுக்கானதாகும். இதுவே அவர்கள் வாங்கிய 1,000 மெகாவாட்டுக்கு ரூ.5,184 கோடி அதிகம் செலவாகியிருக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க கடன் வாங்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த நிலையை சமாளிக்க வேண்டிய  அவல நிலையையும் கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள். மேலும் கடன் வாங்கித்தான் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செலவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஊதாரித்தனமாக நடந்துகொண்டதாலும், பொறுப்பற்ற நிலையில் நிர்வாகம் செய்தததாலும் ஏற்படுத்தப்பட்ட நஷ்டமாகும். அவர்கள் நிர்வாகத்திறமையோடு நடந்திருப்பார்களேயானால் இந்த 5,200 கோடி நஷ்டத்தை குறைத்திருக்க முடியும். 

எனவே,  முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த குறைபாடுகள் போக்கப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் தமிழகம் ஒளிமயமாக மாறும்.

இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த விளக்கமும் வருமாறு:

கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்):

தி.மு.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.33,000 கோடி கடன் சுமை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறீர்கள். ரூ.3.85க்கு வாங்க வேண்டிய மின்சாரம் ரூ.6.35க்கு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. யூனிட்டுக்கு இது ஏறக்குறைய இரண்டரை ரூபாய் அதிகம். மத்திய அரசின் வாயிலாக தான் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படியானால் இந்த கடன்சுமைக்கு மத்திய அரசு துணை போயுள்ளதா? இதில் எங்கே தவறு நடந்தது? எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமா?

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மின்சாரம் கொள்முதல் மத்திய அரசின் மூலம் இல்லை. நிலக்கரி மட்டும் தான் மத்திய அரசு தருகிறது. மின்கொள்முதல் தனியார் மூலம் தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்): தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா? தென்தமிழ் நாட்டின் மிக முக்கியமான கைத்தொழிலாக தீப்பட்டி உற்பத்தி தொழில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலை இயந்திரமயமாக்குவதை தடை செய்யப்படுமா?

அமைச்சர் சண்முகவேலு:தீப்பெட்டி தொழிற்சாலைகளை கிளஸ்டர் அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

குணசேகரன்(சி.பி.ஐ.): மின்சாரம் விலைகொடுத்து வாங்கியதில் 7 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. நிலக்கரி வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா?

கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கக்கூடிய நிலையில் ஒருசிலர் மக்களை அச்சப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை போக்கவும், இத்திட்டத்தை காலத்தே துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

நத்தம் விஸ்வநாதன்(மின்துறை அமைச்சர்): நிலக்கரியை பொறுத்தவரை மத்திய அரசு தான் கொள்முதல் செய்கிறது. எனவே, மத்திய அரசு மீது விசாரணை கமிஷன் போட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் ஊழல் நடந்துள்ளது என்பது மட்டும் உண்மை.

இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony