முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களது இயக்கத்தின் மூலமாக எதிர்க்கட்சிகள் பயனடைந்தால்,-நாங்கள் பொறுப்பல்ல

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

ஹிசா, அக்.- 12 - தங்களது அன்னா ஹசாரே குழு நடத்திவரும்  இயக்கத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பலன் கிடைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாளியாக முடியாது என்று அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.  அரியானா மாநிலம் ஹிசா பாராளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கக் கூடாது என்று கூறி பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஹிசா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போடக் கூடாது என்றார். தாங்கள் கொண்டுவந்த ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிப்பதை வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரைத் தவிர இதர வேட்பாளர்கள் 39 பேரில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்காளர்கள் ஓட்டுப்போடலாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடக்கூடாது என்றும் அவர் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார். எங்களது இந்த பிரச்சாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு பலன் கிடைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. நாங்கள் காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடக் கூடாது என்று சொல்கிறோமே தவிர, மற்ற கட்சிகளுக்கு ஓட்டுப்போடக் கூடாது என்று கூறவில்லை. ஒருவேளை எங்களது பிரச்சாரத்தின் வாயிலாக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் கூறினார். ஹிசா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலைப்  பொறுத்தமட்டில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெய்பிரகாஷ் என்பவரும், பா.ஜ.க. சார்பில் குல்தீப் பிஸ்னோய் என்பவரும், இந்திய தேசிய லோக்தள கட்சியின் சார்பில் அஜய்சிங் என்பவரும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.  மேலும் சுசேட்சைகள் உள்ளிட்ட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!