ஜப்பானை முன்பே எச்சரித்த சர்வதேச அணுசக்தி கழகம்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      உலகம்
wikileaks

லண்டன்,மார்ச்.18 - பெரும் பூகம்பம் ஏற்படும். இதனால் அணுசக்தி நிலையங்களுக்கு சேதம் ஏற்படும் என்று ஜப்பானை சர்வதேச அணுசக்தி ஏஜன்சி எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் ரகசியங்களை குறிப்பாக அமெரிக்காவின் செயல்பாடுகளை விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை ஓட்டு கோரியபோது வெற்றிபெறுவதற்காக காங்கிரஸ் கூட்டணி அரசு ரூ. 60 கோடி வரை எம்.பி.க்களுக்கு லஞசம் கொடுத்தது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஏற்பட்ட கூச்சலையொட்டி இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் ஜப்பானையும் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  எச்சரித்ததும் தெரியவந்துள்ளது. ஜப்பானில் பெரும் பூகம்பம் எந்த நேரத்திலும் ஏற்படலாம். இதனால் பசிபிக் கடலில் சுனாமி வீசி அணுசக்தி நிலையங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று ஜப்பானை சர்வதேச அணுசக்தி ஏஜன்சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையாக எச்சரித்ததாகவும் அதே விக்கிலீக்ஸ் இணையதளம் தகவலை வெளியிட்டுள்ளது என்று பிரிட்டனில் இருந்து வெளியாகும் டெய்லி டெலகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானில் உள்ள அணுசக்தி நிலையங்களில் இருக்கும் அணுஉலைகள் 7 புள்ளி அளவுக்குத்தான் பூகம்பத்தை தாங்கக்கூடியவை. அதற்குமேல் பூகம்பம் அளவு இருந்தால் அது அணுஉலையை பாதிக்க செய்யும் என்றும் சர்வதேச அணுசக்சி ஏஜன்சி எச்சரித்ததாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளதாக டெய்லி டெலகிராபில் செய்தி வெளியாகியுள்ளது.  மேலும் கடந்த 2008-ம் ஆண்டு அணுசக்தி நாடுகள் கூட்டம் டோக்கியோவில் நடந்தது. அப்போது ஜப்பானில் அணுசக்தி பாதுகாப்பு விதிமுறைகள் பழமையானவைகளாக போய்விட்டது என்றும் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி எச்சரித்துள்ளது. பூகம்பம், சுனாமி போன்றவைகளால் ஆபத்து ஏற்படாமல் அணுசக்தி நிலையங்களை பாதுகாக்க ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 11-ம் தேதி சுனாமி தாக்கியதில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அணுசக்தி நிலையத்தில் 4 அணுஉலைகள் வெடித்து சிதறியுள்ளன. இதனால் அந்த அணுசக்தி நிலையத்தை சுற்றிலும் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தலைநகர் டோக்கியோ வரை அணுகதிர்வீச்சு இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் சுமார் 3 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: