முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மாற்றத்தை கொண்டுவாருங்கள் பிரியங்காகாந்தி தேர்தல் பிரச்சாரம்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

பால்பத்ராபூர், பிப்.- 4 - உத்தர பிரதேசத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள் என்று  அம்மாநில வாக்காளர்களுக்கு  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இம்மாதம் 8 ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3 ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான இம்மாநிலத்தில்  பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  குறிப்பாக காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த தலைவர்கள்  சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி ,  அவரது மகனும் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி,  அவரது  சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பல்பத்ராபூர் என்ற இடத்தில் நடந்த பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். தேர்தலின் போது பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது  வழக்கம். அது போலத்தான் நானும் இந்த  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் உண்மையான வேட்பாளர்கள் யார் என்பதை  வாக்காளர்களுக்கு  அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.  காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த வேட்பாளர்கள்தான் உண்மையான  வேட்பாளர்கள்,  அவர்கள்தான் மக்களுக்காக பாடுபடுவார்கள். எனவே அவர்களுக்கு வாக்களித்து உ.பி.யில் ஒரு மாற்றத்தை  கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  காங்கிரஸ் வேட்பாளர்களை மனதில் கொண்டு வாக்காளர்கள் தங்களது ஓட்டுக்களை காங்கிரஸ் கட்சிக்கு போட வேண்டும் என்று  அவர் கேட்டுக்கொண்டார். இந்த பல்பத்ராபூர் ராகுல் காந்தியின் எம்.பி. தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   உ.பி. மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும்  மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முறையாக நடக்கவும்  காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டுப்போட வேண்டும் என்றும் பிரியங்கா கேட்டுக்கொண்டார். உத்தர பிரதேசத்தில் கடந்த 22 ஆண்டு காலமாக ஜாதி மற்றும் மத அரசியல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் இப்போது அதற்கு வேலை இல்லை. இப்போது வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க மக்கள் முன்வந்து விட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்