முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி.ஊழல் வழக்கு சி.பி.ஐ. டைரக்டர் ஏ.பி.சிங்குடன் ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆலோசனை

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, பிப்.- 6 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை மேற்கொண்டு விசாரிப்பது குறித்த ஆயத்த பணிகள் மற்றும் நடைமுறைகள் ஆகியன குறித்து சி.பி.ஐ. டைரக்டர் ஏ.பி.சிங்குடன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதீப்குமார் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.  2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு சிதம்பரம் தொடர்பான மனு மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு முடிவு செய்யும் என்று கூறியது. அதன்படி சிதம்பரம் விவகாரம் தொடர்பான மனு மீது விசாரணை நடத்திய சி.பி.ஐ.சிறப்பு கோர்ட்டு சுப்பிரமணியசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. மேலம் ஆ.ராசாவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 கம்பெனிகளின் 122 2 ஜி. உரிமங்களை ரத்து செய்தும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த ஊழல் வழக்கை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்பார்வையிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை நிறுவனமான சி.பி.ஐ.யின் டைரக்டர் ஏ.பி.சிங்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமாரும் நேற்று டெல்லியில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். அப்போது 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டு எப்படி நடத்துவது? என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து இவர்கள் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்