முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி கிடைக்காது

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 22 - முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பதால் மத்திய அரசின் அனுமதி கிடைக்காது என்று தெரிகிறது. மேற்கு தொடர்ச்சி மலை நிபுணர் குழுவும், சுற்றுச்சூழல் நிபுணர் குழுவும் புதிய அணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரள அரசு செய்து வரும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போதைய அணை பாதுகாப்பற்றது என்று கேரளா கூறுவதை பல்வேறு நிபுணர் குழுக்கள் நிராகரித்துள்ள போதிலும் கேரள அரசு ஏற்க மறுக்கிறது. 

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள அதிகார குழு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. இந்த நிலையில் தற்போதைய அணைக்கு 336 மீட்டர் தொலைவுக்குள் புதிய அணை கட்டுவதற்கான இடத்தை கேரள அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ரூ. 623 கோடி செலவில் இந்த அணையை 2 ஆண்டுக்குள் கட்டி முடிப்போம் என்று கேரள அரசு கூறியுள்ளது. ஆனால் இதற்கான மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியை இதுவரை அது பெறவில்லை. இதற்கான விண்ணப்பத்தையும் அது தாக்கல் செய்யவில்லை என்று முதல்வர் உம்மன்சாண்டி கூறியிருந்தார். ஆனால் அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

இதற்கிடையில் மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய அணை கட்டுவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டார். புதிய அணை கட்டுவதால் பெரியாறு புலிகள் காப்பகத்திற்கும் அரிய வகை தாவரத்திற்கும் மற்றும் விலங்கினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர் குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டும் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் தனிப்பகுதியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்ட பகுதியாகும். எனவே இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்