முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று நள்ளிரவு முதல் 5 மாநில கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சேலம் பிப்.- 29 - புதிய வாடகை ஒப்பந்தம் மற்றும் புதியதாக டெண்டரில் கலந்து கொண்ட லாரிகளுக்கு வேலை அளிக்காதது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் சமையல் கேஸ் விநியோகத்தை மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி.,பி.பி.சி,எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இதற்காக சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை ஒப்பந்தம் மேற்கொள்கின்றன. நாமக்கலை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு, ஆந்திரா,கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி.கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான டேங்கர் லாரிகள் உள்ளன. ஆயில் நிறுவனங்களுடன் போடப்பட்ட வாடகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 ந் தேதியுடன் முடிந்துவிட்டது.கடந்த 4  மாதம் ங்களுக்கு முன்பு ஆயில் நிறுவனங்கள் அறிவித்த டெண்டரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4100 டேங்கர் லாரிகளுக்கு பணி ஆணை அளிக்க கோட் செய்திருந்தனர். ஆனால் ஆயில் நிறுவனங்கள் புதியதாக கலந்து கொண்ட 600 லாரிகளுக்கு வேலை அளிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து அனைத்து வாகனங்களுக்கும் வேலை அளிக்க வேண்டும். வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 12 ந் தேதி முதல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். இதில் தமிழக அரசு தலைமையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் பிப்ரவரி இறுதிக்குள் வாடகையை உயர்த்தி வழங்குவது, அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு அளிப்பது என ஆயில் நிறுவனங்களின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து  டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர். இந்த ஸ்டிரைக் 7 நாட்கள் நீடித்தது. இன்றுடன் பிப்ரவரி மாதம் முடியும் தருவாயில் எண்ணெய் நிறுவனங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒத்துக் கொண்டபடி வாடகையை உயர்த்தி வழங்கவில்லை.

எனவே இந்த சூழ்நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று காலை நாமக்கலில் நடைப்பெற்றது. சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.இதில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பல மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  இன்று 29 ந் தேதி நள்ளிரவு முதல் 5 மாநில டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மாநில தலைவர் பொன்னம்பலம் நிருபர்களிடம் கூறியதாவது. ஆயில் நிறுவனங்கள் புதியதாக டெண்டரில் கலந்து கொண்ட 600 வாகனங்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும், புதிய வாடகை ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்றும் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே நாளை(இன்று) நள்ளிரவு முதல் 4100 கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக ஆயில் நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளும் வரை போராட்டம் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த 5 மாநில எல்.பி.ஜி.கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற போராட்டம் அறிவித்துள்ளதால் இந்த 5 மாநிலங்களிலும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்