முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மின் பற்றாக்குறை: மத்தியஅரசு வஞ்சிக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

திருச்சி, செப். - 30 - தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது என்று மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களவை தொகுதி அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது, காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் கருணாநிதிதான். நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை தி.மு.க தலைவர் கருணாநிதி தடுக்கிறார். தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு காரணம் முதல்வர் ஜெயலலிதா அல்ல. இது தற்காலிக பின்னடைவுதான். ஆனால் இந்த பின்னடைவை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டும் மத்திய அரசு வழங்கவில்லை. அத்துடன் நமக்கு ஒப்பந்தப்படி உரிமைப்படி வழங்க வேண்டிய 2950 மெகாவாட் மின்சாரத்திலும் ஆயிரத்து 1100 மெகாவாட் மின்சாரத்தை வழங்காமல் குறைத்து விட்டது. மேலும் மாநில அரசின் சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து சுமார் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கான திட்டத்துக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திடடத்தில் இருந்து சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுத்து இரு மாநிலங்களுக்குமாவது பகிர்ந்து வழங்குங்கள் என்று கூறினாலும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அந்த அரசை இங்குள்ள தி.மு.க தாங்கி பிடிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அந்த மத்திய அரசை இயக்குகிறார் கருணாநிதி. அ.தி.மு.க ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க முயலுகிறார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்