முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள்...!

புதன்கிழமை, 16 நவம்பர் 2016      வேளாண் பூமி
Image Unavailable

தாவர புரதச்சத்து அதிகம் உள்ள பயிர்களில் பயறுவகைப் பயிர்களே முக்கிய இடம் வகிக்கின்றன. சராசரியாக 100 கிராம் பயறுவகை பயிரில் 335 கிலோ கலோரி எரிசக்த்தியும், 20 - 25 கிராம் புரதச்சத்தும், 140 மி.கி. கால்சியமும், 300 மி.கி. பாஸ்பரசும், 8 மி.கி இரும்புச்சத்தும், 0.5 மி.கி. தயமின், 0.3 மி.கி ரிபோபிளேவின் மற்றும் 2 மி.கி நியாசினும் உள்ளது. ஆகையால், நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் பயறுவகைப் பயிர்கள் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதச்சத்தை வழங்குவதால் ஏழைகளின் மாமிசம் என்றும் அழைக்கப்படுகின்றது.

மேலும், பயறுவகைப் பயிர்கள் நமக்கு உணவுப் பொருளாக மட்டுமின்றி கால்நடைகளைக்கு சிறந்த தீவானமாகவும், பசுந்தாள் உரமாகவும், மண் அரிமானத்தை தடுக்கும் போர்வையாகவும், மண்வளத்தை காப்பவையாகவும் விளங்குகின்றன. பயறுவகைப் பயிர்களின் முக்கியத்துவம், புரதச்சத்து பற்றாககுறையை போக்குவதில் அதன் பங்கு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தினை உணர்ந்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டும் ஐ.நா. பொதுச் சபை 2016 ஆம் ஆண்டை உலக பயறு வகைகள் ஆண்டாக அறிவித்துள்ளது.

உலக அளவிள், இந்திய பயறுவகைப் பயர்கள் உறுபத்தி (23 சதவிகிதம்), பயன்படுத்துதல் (27 சதவிகிதம்), இறக்குமதி செய்வதில் (14 சதவிகிதம்) முதலிடம் வகிக்கின்றது. தமிழகத்தில் பயறுவகைப் பயிர் 8.8 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மொத்தப் பரப்பளவில் 17 சதவிகிதம் ஆகும். தமிழகத்தில், 7.6 லட்சம் டன் பயறுவகை உற்பத்தி செய்யப்பட்டு எக்டருக்கு 867 கிலோ விளைச்சல் பெறப்பட்டாலும், உலக உற்பத்தித்திறனைவிடக் குறைவே (908 கிலோ ஃ எக்டர்) ஆகும். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையான தனி மனித புரதச்சத்து தேவை 80 கிராம் என்ற போதிலும் 1960 ல் தனிநபருக்கு நாள் ஒன்றுக்கு கிடைக்கும் அளவு 60 கிராமிலிருந்து தற்போது 42 கிராமாக குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தின் பயறுவகைத் தேவை 12.0 இலட்சம் டன் எனவும், தற்போதைய உற்பத்தியுடன் ஒப்பிடும்போது சுமார் 4.4 இலட்சம் டன் பற்றாக்குறை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சுமார் 13 வகையான பயறுவகைகள் பயிரிடப்படுகின்றன. அவற்றில், துவரை, உளுத்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, அவரை மற்றும் கொள்ளு முதலியவை முக்கியமானவை. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயறுவகைப் பயிர்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து அதிக விளைச்சலை பெற பரிந்துரை செய்யப்படுகிறது, துவரை தமிழ்நாட்டில் 0.72 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அகிக விளைச்சல் அடைவதற்கு புதிய இரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டும் துவரை இரகங்களை குறுகிய கால இரகங்கள், நடுத்தர வயதுடைய இரகங்கள், நீண்ட கால இரகங்கள் மற்றும் பல ஆண்டுகள் பயன் தரும் இரகங்கள் என வகைப்படுத்தலாம். வம்பன் 3, ஏ.பி.கே 1 ஆகிய இரகங்கள் குறுகிய கால வயதுடைய (100 - 110 நாட்கள்), கோ (ஆர்ஜி) 7 நடுத்தர வயதுடைய (120 - 130 நாட்கள்) மற்றும் கோ 6, வம்பன் 2 ஆகியவை நீண்ட கால வயதுடைய (170 - 180 நாட்கள்) துவரை இரகங்களாகும். பி.எஸ்.ஆர் 1 பல ஆண்டுகள் பலன் தரும் துவரை இரகமாகும்.

தமிழ்நாட்டில் உளுந்து சுமார் 3.73 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படடு 3.58 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகளின் பயனாக வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வம்பன் 3, வம்பன 4, வம்பன் 5, வம்பன் 6, வம்பன் 7, வம்பன் 8 ஆகிய இரகங்களும், கோயம்புத்தூரிலிருந்து கோ 6 என்ற இரகமும், ஆடுதுறையிலிருந்து ஏடிடீ 3 மற்றும் ஏடிடீ 5 ஆகிய இரகங்களும், திண்டிவனம் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து டிஎம்வி 1 என்ற இரகமும், அருப்புக்கோட்டையிலிருந்து ஏபிகே 1 என்ற இரகமும்; நல்ல விளைதிறன், பூச்சி, நோய் மற்றும் வறட்சி ஆகியவற்றை தாங்கி வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட இரகங்களாகும்.

இவற்றில் வம்பன் 3, வம்பன 4, வம்பன் 5, வம்பன் 6, வம்பன் 7, வம்பன் 8, டிஎம்வி 1 இரகங்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை - மாசி பட்டங்களிலும் பயிரிட ஏற்றது. கோ 6 என்ற இரகம் தமிழ்நாட்டில் புரட்டாசிப் பட்டத்தில் பயிரிட ஏற்றது. ஏபிகே 1 இரகம் தென் மாவட்டங்களில் மானாவாரிப் பருத்தியில் ஊடுபயிராக பயிரிட எற்றது. ஏடீடி 3 இரகம் நெல் தரிசில் (ஜனவரி) பயிரிட ஏற்றது. ஏடீடி 5 இரகம் நெல் தரிசு (ஜனவரி) மற்றும் கோடை இறைவையில் (பிப்ரவரி - மார்ச்) பயிரிட ஏற்றது. ஆகையால் விவசாயிகள் அந்தந்த பகுதிகேற்ற இரகங்களை பயிர் செய்து அதிக விளைச்சலைப் பெறலாம்.

பாசிப்பயறு தமிழ்நாட்டில் 2.29 லட்சம் எக்டரில் பயிர் செய்யப்பட்டு 1.80 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. பாசிப்பயறு ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம், கோடைப்பருவம் மற்றும் நெல்தரிசில் நெல் அறுவடைக்குப்பின் பயிர் செய்ய உகந்தது. ஊடுபயிராக பழ மரங்கஞக்கு இடையிலும் பயிர் செய்யலாம். வம்பன் (ஜிஜி) 2, வம்பன் (ஜிஜி) 3, கோ 6, கோ 8, பையூர் 1 இரகங்கள் தமிழகத்தில் ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டங்களில் மானாவாரியாக பயிரிட ஏற்றது. கோ (ஜிஜி) 7 மற்றும் விரிஞ்சிபுரம் 1 இரகங்கள் ஆடி பட்டத்தில் மானாவாரியாக பயிரிட ஏற்றது.

ஏடிடீ 3 இரகம் நெல் தரிசில் (ஜனவரி - பிப்ரவரி) பயிரிட ஏற்றது. தட்டைப்பயறு தமிழகத்தில் 0.42 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. தட்டைப்பயறு தானியமாகவும், பச்சை காய்கள், காய்கறியாகவும் பயன் தரவல்லது. தட்டைப்பயறு நிழலைத்தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது. வறட்சியைத் தாங்கி வளரும் கொள்ளு மானாவாரி பயிராகப் பயிரிடப்படுகிறது. இது ஒரு குளிர் கால பயிராகும். தமிழ்நாட்டில் கொள்ளு சுமார் 0.60 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மற்றொரு குளிர் பருவப் பயிரான கொண்டைக்கடலை தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பரவலாகவும், ஈரோடு, சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளில் கரிசல் மண் நிலத்திலும் பயிரிடப்படுகிறது.

பயறுவகைப் பயிர்ச் சாகுபடியில் உற்பத்தித்திறன் பயிரின் முழு உற்பத்தித் திறனைக் காட்டிலும் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு :-

 • வளமற்ற மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தல்
 • குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட இரகங்களை பயன்படுத்துதல்
 • தரமற்ற மற்றும் கலப்பு விதைகளை பயன்படுத்துதல்
 • எந்தவித உரமும் பயன்படுத்தாது சாகுபடி செய்தல் அல்லது குறைந்த அளவில் உரமிட்டு சாகுபடி செய்தல்
 • சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்காமல் இருத்தல்
 • பரிந்துரை செய்யப்படும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை பயிர் செய்யும் சூழ்நிலைக்கேற்ப சரியான தருணத்தில் முறையாக கடைபிடிக்காமை
 • பயறுவகைப் பயிர்ச் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வழிமுறைகள்
 • பயறுவகைப் பயிர்களைத் தனிப்பயிராக அதிகம் பயிரிட வேண்டும் 
 • அதிக இடைவெளியுள்ள பயிர்கள் பயிரிடும் போது ஊடு பயிராக பயறுவகைப் பயிர்களைப் பயிராக பயறுவகைப் பயிர்களைப் பயிரிடலாம்
 • வயல் வரப்புகளில் பயிரிடலாம்
 • பயிர்ச் சுழற்சியில் பயறுவகைப் பயிர்களைக் கட்டாயம் சாகுபடி செய்தல் வேண்டும்
 • பாசனைப் பகுதிகள் மற்றும் தாமிரபரணி, வைகை போன்ற ஆற்று படுகைகளில் நெல் தரிசில் பயறுவகை பயிர்களை பயிரிடுவதற்கு முக்கியத்திவம் அளக்கி வேண்டும்
 • பருத்தி, கரும்பு, சோளம் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கிடையில் பயறு வகைகளை ஊடுபயிராக பயிரிடலாம்
 • மண் பரிசோதனை செய்து பரிந்துரை செய்யப்பட்ட சாகுபடி குறிப்புகளை பயன்படுத்தி சாகுபடியை அதிகரிக்கலாம்
 • சான்று விதைகளை பயன்படுத்தி விதைக்க வேண்டும். சரியான தருணத்தில் சான்று விதைகள் உழவர்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும்
 • பயறு வகைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மேலாண்மை உத்திகள்
 • பாசன வசதி உள்ள பகுதிகளில் துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளைத் தனிப் பயிராக பயிரிடுதல்
 • சரியான பட்டத்தில் காலத்திற்கேற்ற உயர் விளைச்சல் இரகத்தைத் தேர்வு செய்தல் 
 • விதைகளை நுண்ணுயிர்,பூஞ்சாண விதை நேர்த்தி மற்றும் கடினப்படுத்தி விதைத்தல்
 • செடிகளுக்கிடையே சரியான இடை வெளியைப் பராமரித்தல்
 • பாசன வசதியுள்ள இடங்களில் துவரையை நாற்றுவிட்டு உரவழி நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம்
 • ஒருங்கிணைந்த களை நிர்வாகம், உரநிர்வாகம், பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் மேற்கொள்ளுதல்
 • பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் ஆரம்பநிலையை கண்காணித்து தகுந்த பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை பின்பற்றி பயிர் வகை பயிர்களில் விளைச்சலை அதிகரிக்கலாம்.
 • இரண்டு சத டி.ஏ.பி உரத்தையும், பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கியையும் பூக்கும் பருவத்திலும், 15 நாட்கள்  கழித்து மீண்டும் ஒருமுறை இலை வழியாக அளித்தல்
 • பயறுவகைப் பயிர்களை, வறட்சி ஏற்படுகின்ற போது நடமாடும் நீர்த் தெளிப்பானைப் பயன்படுத்தி வறட்சியிலிருந்து பாதுகாத்து அதிக விளைச்சலைப் பெறலாம்
 • ஓரே சமயத்தில் செடிகள் முதிர்ச்சி அடைந்து அறுவடை செய்யத் தகுந்த இரகங்களை பயிரிடுதல்
 • நல்ல சேமிப்பு கிடங்குகளில் விதைகளைப் பராமரித்து, முளைப்புத் திறன் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்
 • அறுவடைப் பின்சார் தொழில்நுட்ப ஆய்வுகளை மேம்படுத்துதல்
 • பயறு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தினை அதிகரிக்க த.வே.ப.க பயறு ஒண்டர் தெளித்தல். 1 ஏக்கருக்கு 2.0 கிலோ அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்கள் பூக்கும் சமயத்தில் காலை நேரத்தில் இலைவழி தெளித்தல்
 • உற்பத்தியாளர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பருப்பு உடைக்கும் கருவியை வாங்கி பயன்படுத்தி துவரை, உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை பருப்பாக உடைத்து, சுத்தம் செய்து, தரம் பிரித்து அதிக வருமானத்தை ஈட்டலாம்.

தமிழ்நாட்டில் பயறுவகைப் பயிர்கள் தேவைக்கு மிகக் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் எதிர்காலத்தில் அவற்றிற்கான சந்தை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வேளாண் விற்பனை, வேளாண் வணிக ஆணையரின் ஆலோசனையைப் பெற்று உழவர்கள் ஒழுங்கு முறை விற்பனை மையத்தின் சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் சந்தைத் தகவல் மையத்தின் மூலம் அளிக்கப்படும் விலை நிலவரங்களை உழவர் பெருமக்கள் அறிந்து செயலாற்றினால் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண் உற்பத்தித் திட்டத்தில் பயறுவகை பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உழவர்கள் மேற்கூறிய அனைத்து நவீன மேலாண்மை தொழில் நுட்பங்களையும் முறையாகக் கடைப்பிடிப்பதன் வாயிலாக பயறுவகைப் பயிர்களின் உற்பத்தித் திறனைக் கணிசமாக உயர்த்த வாய்ப்புள்ளது.

தீவர பயறு உற்பத்தித் திட்டம்:- தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் துவக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்ட பயறுவகை அபிவிருத்தித் திட்டமானது சிறந்த கிராமப்புற வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய, மண்வளம் மற்றும் மனித இன ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வேளாண் திட்டங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மற்ற பயிர்களைப் போலின்றி உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரை பயிர்களின் சாகுபடி மண் வளம் மற்றும் மக்களின் ஆரோகியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும், கிராமப்புற வேளாண் குடும்பங்களின் நலன் மற்றும் அவர்களின் கூடுதல் வருமானத்திற்கு இவை பெரிதும் வழி வகை செய்கின்றன.

சமீபகாலமாக பயறுவகைப் பயிர்களின் சாகுபடி மற்றும் வேளாண் அறிவியலின் நலன் கருதி இந்த ஆரோக்கியமான போக்கு தொடரப்பட வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பயறுவகைப் பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் அதை சார்ந்து வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இதர ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் பயறுவகைகளுக்கு நல்ல எதிர்கால வாய்ப்புள்ளது.

இந்தியாவின் பயறுவகைகளின் தேவை 2020 ஆம் ஆண்டு 28.8 மில்லியன் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது (சான்று : நடராஜன் மற்றும் சஞ்சீவ் குப்தா, இந்திய பயறுவகை ஆராய்ச்சி நிறுவனம், கான்பூர்). பயறுவகைகளின் தற்போதைய உற்பத்தி அளவு ஏறக்குறையை 18 - 19 மில்லயன் டன்னாக இருப்பதால், பயறுவகைகளின் உற்பத்திபற்றாக்குறையான 10 மில்லயன் டன்னை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் மட்டும் சரி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய அரசு மொசாம்பிக் மற்றும் மியான்மர் நாட்டிலிருந்து சுமார் 6.5 இலட்சம் டன் பயறுவகைகளை இறக்குமதி செய்ததாக தெரிவித்துள்ளது.

பயறுவகைகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை கணிசமான அளவு குறைத்து, குறைப்பதன் வாயிலாக கிடைக்கும் நிதியைக் கொண்டு வேளாண் கருவிகள், தண்ணீர் விரையத்தை குறைக்கும் நீர்பாசன கருவிகளை வழங்கி உற்பத்தியைப் பெருக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்தந்த பகுதிகளுக்கேற்ற பயறுவகை இரகங்கள், உற்பத்தி தொழில் நுட்பங்கள் மற்றும் பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் அறிமுகப்படுத்துவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக்கத்தின் பங்கு இன்றியமையாததாகும்.

பயறுவகைப் பயிர்கள் வளிமண்டல நைட்ரஜனை வேர்முடிச்சுகளில் நிலைப்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தைக் காப்பதோடு, மண்ணின் வடிவத்தையும் மேம்படுத்துகிறது. பயறுவகைப் பயிர்களின் ஆணிவேர் மண்ணைத் துளைத்து அதிக ஆழம் வரை செல்லவும், புரதச்சத்து நிறைந்த இலைகள் மண்ணின் கனிமச் சத்து மற்றும் மண்ணின் வடிவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பயறுவகைப் பயிர்கள் தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. இவை சத்து நிறைந்த காய்கறியாகவும், தீவன பயிராகவும் பயிரிடப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் குறைந்;த பட்சம் ஒரு தனி நபர், நாள் ஒன்றுக்கு முறையே 80 கிராம் மற்றும் 47 கிராம் பயறுவகை உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தியாவில் தனி நபர் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவே பயறுவகை உணவுகளை எடுத்து கொள்கின்றனர். அதாவது 30 - 35 கிராம் என்ற அளவிலேயே இருக்கிறது.

தமிழ்நாடு அரசு பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக முக்கியத்துவம் அளித்து, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் விரைவில் அனைத்து உழவர் பெருமக்களுக்கும் சென்றடைய வகை செய்துள்ளது. தீவிர பயறுவகை உற்பத்தித்திட்டம் தமிழக அரசினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் துவங்கப்பட்டுள்ளது.

2013 - 2014 ஆம் ஆண்டுன் புள்ளி விவரப்படி பரப்பு 8.15 இலட்சம்  எக்டராகவும், உற்பத்தி 6.13 இலட்சம் எக்டராகவும், உற்பத்தி திறன் எக்டருக்கு 752 கிலோவாகவும் அதிகரித்துள்ளது.  பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரித்திட தீவிர பயறுவகை வளர்ச்சித்திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், வேளாண்மைத் துறையும் இணைந்து காவிரி டெல்டா மாவட்டங்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. மண் பரிசோதனை செய்தல், அதிக விளைச்சலை தரவல்ல ஏடீடி 3, ஏடீடி 5, வம்பன் 8 போன்ற உளுந்து இரகங்களை உழவர்களிடம் அறிமுகப்படுத்துதல் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்றவற்றையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு முறைகள் மற்றும் மண் பரிசோதனை போன்றவையும் வேளாண்மைத் துறையால் உறுதி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட பயறுவகைப் பயிர்கள் சாகுபடி முறைகளை அறிமுகம் செய்திட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், வேளாண்மைத்துறையும் இணைந்து வயல்வெளிப் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகளின் முயற்சியால் உளுந்து விளைச்சல் 900 – 1000 கிலோ ஃ எக்டர் வரை பெறப்பட்டுள்ளது. முதன் முறையாக பயறுவகைப் பயிர்களைப் பயிர்களை காவிரி டெல்டா மாவட்டங்களில் சித்திரைப் பட்டத்தில் விதைக்க துவங்கியதன் காரணமாக சாகுபடிப்பரப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக விவசாயிகள் ஆனி மாத தொடக்கத்தில் காவிரி நீருக்காகக் காத்திருப்பார்கள்.
ஆனால் இந்த ஆண்டு தைப்பட்டத்திற்குப்பிறகு இரண்டாம் பயிரான பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்து பரப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னோடி விவசாயிகள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் டெல்டா மாவட்டங்களில் பயறு வகைப் பயிர்களின் சாகுபடி கணிசமாக அதிகரிக்கும் என நம்புகின்றனர். இதன் பயனாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். (தற்போதைய விலை ரூ.100 ஃ கிலோ). மேலும் மண் வளம் மேம்படுவதால், அடுத்த பட்டத்தில் நடப்படும் நெல்லுக்கு உர செலவு குறையும் என நம்பப்படுகின்றது. தாமதமான பாசன நீர் திறப்பினால் பயிர்ச்சுழற்சி முறையில் தைப்பட்டத்திலும், சித்திரைப்பட்டத்திலும் பயறுவகைப் பயிர்கள் மற்றும் சம்பா பட்டத்தில் நெல்லும் பயிரிடப்படுகின்றது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் பயறுவகைகளை தேர்ந்த சந்தையில் விற்பனை செய்து, விளைப்பொருட்களுக்கு சரியான விலையை உறுதி செய்தல், இந்தியாவில் நடப்பாண்டில் பயறுவகைகளின் விளைச்சல் குறைவால் பயறுவகைப்பயிர்களின் விலை மிகவும் அதிகரித்தது. பயறு வகைகளை கிலோவுக்கு ரூ.120 – க்கும் மேல் விற்பனை செய்யாமல் உறுதி செய்யுமாறும், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் மூலம் பதுக்கல்களை தடுத்து நிறுத்த முடிவெடுத்தது. இந்திய அரசு இந்த பற்றாக்குறையை சரி செய்ய 6.5 இலட்சம் டன் பயறுவகைகளை இறக்குமதி செய்தது.

ஆணையர் (NTSHZ விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) அவர்களின் ஆலோசனையை பெற்று தமிழ்நாட்டிலுள்ள ஒழுங்குமுறை சந்தைகளின் சேவையை பயன்படுத்தி பயறு வகைகளை விற்பனை செய்ய வேண்டும். TNCMF மற்றும் TCMF ஆகியவற்றின் கீழ் இயங்கும் கூட்டுறவு சங்கங்கள் பயறுவகைப் பயிர்களை பதப்படுத்துதல், சேமித்தல் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சரியான முறையில் பதப்படுத்தி சந்தைப்படுத்தினால் கூட்டுறவு சங்கங்கள் நிச்சயம் பயன்பெறும்.

பயறு உற்பத்தியில் கீழ்க்காணும் பிரிவுகளில் கவனத்தை செலுத்துவது அவசியம்:- * மாநிலத்தின் சராசரி உற்பத்தியைக் காட்டிலும் அதிக அளவு உற்பத்தி செய்யக் கூடிய இடங்களைக் குறிக்கும் வரைபடம் தயாரித்தல் * சராசரியான விளைச்சலை காட்டிலும் குறைவான உற்பத்தி உள்ள பகுதிகளை கண்டறிந்து, மண்ணை சீரமைத்து, உரங்களை இட்டு மேம்படுத்துல்

 • உயிர் மூலக்கூறியல் சாதனங்களைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் விளைச்சல் நிலைப்புத் தன்மை போன்றவற்றிற்கான பயிர் பெருக்கம் செய்தல்
 • தமிழ்நாட்டில் தரமான விதைகளின் இருப்பினை உறுதி செய்தல் மற்றும் விதை பெருக்கம் செய்யும் வயல்களை கண்காணித்தல்.
 • மரபியல் இனங்களை மதிப்பீடு செய்து பராமரித்தல் 
 • ஒருங்கினைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை உருவாக்குதல் 
 • அறுவடை பின்சார் தொழில் நுட்பத்தை கடைபிடிப்பதன் வாயிலாக ஏற்படும் இழப்புகளை தவிர்க்க ஆராய்ச்சிகளை முனைப்பாக செயல்படுத்துதல்
 • குறிப்பிட்ட இரகங்களுக்கான சாகுபடிப் பகுதிகளை வரையருத்தல்

மொத்தத்தில் அறிவியல் பூர்வமான உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய பயறு வகைப் பயிர்களின் உற்பத்தின் திட்டம் வெற்றி கரமானதாகவும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும்.

துவரையில் உயிர் விளைச்சல் இரகங்கள்:- புரதச்சத்து மிகுந்து பயறு வகைகள் நமது உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் மிகவும் அவசியமானது. பயறு வகைப் பயிர்களில் உள்ள புரதத்தின் அளவு தானியப் பயிர்களின் புரதத்தை ஒப்பிடுகையில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாகும். பயறு வகைகளை உட்கொள்வதால் தானியப் பயிர்கள் மட்டும் சாப்படுவதால் ஏற்படும் அமினோ அமிலக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம். தமிழ்நாட்டில் பயறுவகைகள் 90 விழுக்காட்டிற்கும் மேல் மானாவாரிப் பயிராக பயிரிடப்படுகிறது. இவற்றை பெரும்பாலும் ஆனி - ஆடிப் பட்டம் மற்றும் புரட்டாசிப் பட்டத்தில் பயிரிட்டாலும், நெல் தரிசில் பயிரிடப்படும் பயறு வகைகள் தை மற்றும் மாசி மாதங்களில் நெல் அறுவடைக்குப் பின் பயிர் செய்யப்பட்டு, பயறு உற்பத்தியில் ஒரு முக்கிய பங்கினை தமிழ்நாட்டில் ஆற்றி வருகிறது, நெல் தரிசில் பயிரிடப்படும் பயறு வகைகள் நெல் வயலில் மீதமுள்ள ஈரப்பதத்தினை பயன்படுத்தி பயறு உற்பத்திக்கு வழி வகுப்பதோடு தழைச் சத்தினை வயல்களில் அதிகரிக்கவும் உதவகிறது.

பயறு வகைகளில் துவரைப்பியிர் நம் தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான பயறுவகைப் பயிராகும். தமிழ்நாட்டில் 0.38 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. பயறு வகைகளின் விளைச்சல் தட்பவெப்பம், நோய் மற்றும் பூச்சி போன்ற பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக்த்தில் பயறு வகை ஆராய்ச்சி சுமார் 60 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர் இனைப்பெருக்க முறையான தனிவழித் தேர்வு முறை மூலம் ஆரம்பகாலங்களில் இரகங்கள் அறிமுகப்படுத்திப்பட்டது. உதாரணமாக எஸ்.ஏ 1, கோ 2 ஆகியவையாகும். மேலும், சடுதி மாற்றம் மூலம் கோ 3, கோ 5, கோ 6 ஆகிய இரகங்கள் வெளியிடப்பட்டது. இருந்த போதிலும் குறிப்பிடத்தக்க விளைச்சல் முன்னேற்றம் ஏற்படாத காரணங்களால் வீரிய ஒட்டு இரகங்கள் முறையே கோ. பி.எச். 1 மற்றும் கோ. பி.எச். 2 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது.

துவரை இரகங்கள்:-

 • குறுகிய கால இரகங்கள் (100 - 110 நாட்கள்)
 • நடுத்தர வயதுடைய இரகங்கள் (120 - 130 நாட்கள்) 
 • நீண்ட கால இரகங்கள் (180 நாட்கள்) என வகைப்படும்
 • குறுகிய கால இரகங்கள் (100 - 110 நாட்கள்)

வம்பன் 1 பிபாத் எச்ஓய் 3எ, டீ21ழூ102 ஆகிய இரகங்கள் ஒட்டு சேர்த்து பின்னர் தேர்வு செய்து உருவாக்கப்பட்டது. இந்த இரகம் ஆடிப்பட்டம் மற்றும் கோடைகாலத்திற்கு உகந்த இரகமாகும். இந்த இரகத்தினை தென்மாவட்டங்களில் ஆடிப்பட்டம், கோடைகாலங்களில் அதிகமாக பயிரிடலாம். இதன் பூக்கள் கொத்து கொத்தாக பூப்பதால், காய்களும் ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடையும். எனவே, ஒரே நேரத்தில் அறுவடை செய்யலாம். இந்த இரகம் மானாவாரியில் 840 கிலோவும், இறவையில் 1200 கிலோ விளைச்சலும் தரவல்லது.

வம்பன் 3  இந்த இரகம் வம்பன் 1ழூ குல்பர்கா ஆகிய இரகங்களை ஒட்டுசேர்த்து, பின்னர் தேர்வு செய்து உருவாக்கப்பட்டது. ஆடிப்பட்டம் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ற தென் மாவட்டங்களுக்கு உகந்த இந்த இரகம் தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும் பயிரிடப்படுகின்றது. நூறு நாட்கள் வயதுடைய இந்த இரகம் 880 கிலோ விளைச்சல் தரும். இந்த இரகம் மலட்டு தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டதாகும்.

ஏ.பி.கே 1   இந்த இரகம் ஐசிபிஎல் 87101 ல் தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. வறட்சி மற்றும் மலட்டுத்தேமல் நோய் தாக்குதலுக்கு தாங்கும் தன்மை கொண்ட இந்த இரகம் மதுரை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்ற இரகமாகும.;

நடுத்தர வயதுடைய இரகங்கள் (120 - 130 நாட்கள்):- வீரிய ஒட்டு இரகம் கோ.பி.எச். 2, கோ 5 மற்றும் கோ (ஆர்ஜி) 7 ஆகிய இரகங்கள் நடுத்தர வயதுடையவை.

கோ (ஆர்ஜி) 7   கோ (ஆர்ஜி) 7 துவரை பி.பி. 9825 (ஐ.சி.பி. 8863 ஏ.எல்101) ழூ(பி128 ழூடிடி 6) என்ற வளர்பிலிருந்து தனித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இரகம் அகில இந்திய அளவில் கோ.ஆர்.ஜி 9701 என பெயரிடப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒரிசா மாநிலங்களில் பயிரிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2800 கிலோ - எக்டர் விளைச்சல் தரவல்ல இந்த இரகத்தில் நூறு விதைகளின் எடை 9.0 - 11.4 கிராம் வரை உள்ளது. அதிக கிளைகள், காய் கொத்துக்கள் கொண்ட இந்த இரகம் ஆடிப்பட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது.

நீண்டகால இரகங்கள் (180 நாட்கள்):- கோ 6 மற்றும் வம்பன் 2 ஆகிய இரகங்கள் நீண்ட கால இரகங்களாகும்.

கோ 6   சடுதி மாற்றம் மூலம் எஸ்ஏ 1 என்ற இரகத்தில் பெறப்பட்ட இந்த இரகம் எல்லா மாவட்டங்களுக்கும் ஆடிப்பட்டத்தில் பயிரிட ஏற்றது. குழாய் துளைப்பானை தாங்கி வளரும் இந்த இரகம் 900 கிலோ விளைச்சல் தரவில்லது. இந்த இரகம் மானாவாரியில் 1800 கிலோ - எக்டர் விளைச்சல் தரவல்லது.

வம்பன் 2  ஐ.சி.பி.எல் 341 பவானிசாகரிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த இரகம் எஸ்ஏ 1 இரகத்தைவிட 20 சதவிகிதம் அதிக விளைச்சல் உடையது. தமிழகமெங்கும் மானாவாரியில் பயிரிட உகந்த இந்த இரகம் மலட்டுத்தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. இது 170 முதல் 180 நாட்களில் எக்டருக்கு 1050 கிலோ விளைச்சல் தரவில்லது. ஏஸ்ஏ 1 மற்றும் கோ 6 இரகத்திற்கு மாற்று இரகமாகும்.

இவ்வாறாக பலவிதமான வயதுடைய துவரை இரகங்களை அந்தந்த மாவட்டத்திற் கேற்ற பருவநிலையில் பயிரிட்டால் விவசாய பெருமக்கள் இதிக விளைச்சல் பெறலாம்.

அதிக விளைச்சல் தரும் கோ (ஆர்ஜி) 7 துவரை இரகம்:- அவரைக் குடும்பத்தைச் சார்ந்த பயறு வகைகள் அதிகளவு புரதச்சத்து மிகுந்தது. பயறு வகைப் பயிர்களில் உள்ள புரதத்தின் அளவு தானியப் பயிர்களின் புரதத்தை ஒப்பிடுகையில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், பயறு வகைகளை உட்கொள்வதால் தானியப் பயிர்கள் மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கிய அமினோ அமிலக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம். ஆனால், பயறு வகைகளை சாகுபடி செய்யும் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. எனவே, உற்பத்தித் திறனும் குறைகின்றது.

பயிறு வகைகளில் துவரை நம் தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான பயறுவகைப் பயிராகும். துவரை 22 சதவிகிதம் புரதச்சத்து மிக்கது. இந்திய நாட்டில் சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு தேவையான புரதச்சத்து துவரையில் இருந்து தான் கிடைக்கப் பெறுகின்றது. தமிழ்நாட்டில் துவரை சுமார் 0.60 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 0.58 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும், இதன் சராசரி விளைச்சல் எக்டருக்கு 967 கிலோ ஆகும். தமிழ்நாட்டில் துவரை ஆடி, புரட்டாசி மற்றும் தைப் பட்டத்தில் பயிரிடப்படுகின்றது. இருப்பருவ காலங்களில் பயிர் செய்வதய்கு ஏற்ற துவரை இரகம் கோ (ஆர்.ஜி) 7 இரகமாகும்.

இந்த இரகம் பி.பி.9825 யிலிருந்து தனிவழித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. 120 முதல் 130 நாட்கள் வயதுடைய இந்த இரகம் கோவை, சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள மானாவாரி மற்றும் இறவை நிலங்களில் பயிரிட உகந்தது.

சிறப்பியல்புகள்  கோ 5 மற்றும் ஏபிகே 1 இரங்களைவிட 25.0 சதவிகிதம் அதிக விளைச்சல் தரவல்லது.

அதிகப் புரதச்சத்து (23.5 சதவிகிதம்) கருஞ்சிவப்பு நிற விதைகள் மலட்டு தேமல் நோய் மற்றும் காய் ஈ தாக்குதல் குறைவு எல்லா பருவத்திற்கும் ஏற்றது.

உழவியல் நுட்பங்கள்

பருவம்: ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம் மற்றும் தைப்பட்டம்.
விதையளவு: 25 கிலோ - எக்டர்

நிலம் தயாரித்தல் நன்கு உழுது நிலத்தை பண்படுத்தவும். பெரும்பாலும் துவரை மானாவாரியாக பயிரிடப்படுவதால் பாத்திகள் அமைத்து பயிரிடலாம் அல்லது 60 ஒ 20 செ.மீ. இடைவெளிவிட்டு பயிரிடலாம் விதை நேர்த்தி கார்பென்டாசிம் அல்லது திரம்: ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் (அல்லது)

டிரைக்கோடெர்மா விரிடி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதையுடன் 3 பாக்கெட் ரைசோபிய நுண்ணுயிரை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
உர நிர்வாகம் விதைக்கும் முன் அடியுரமாக ஒரு எக்டருக்கு  மானாவாரி பயிர்எனில்

: 12.5 கிலோ தழைச்சத்து
: 25 கிலோ மணிச்சத்து
: 12.5 கிலோ சாம்பல் சத்து
: 10 கிலோ கந்தக் சத்து
: 12.5 கிலோ துத்தநாக சல்பேட் இட வேண்டும்

இறவை பயிர் எனில்

: 25 கிலோ தழைச்சத்து
: 50 கிலோ மணிச்சத்து
: 25 கிலோ சாம்பல் சத்து
: 20 கிலோ கந்தக் சத்து
: 25 கிலோ துத்தநாக சல்பேட் இட வேண்டும்

பூக்கும் தருணத்திலும், பூத்த 15வது நாளிலும் 100 பி.பி.எம் சாலிசிலிக் அமிலக் கரைசல் (50 கிராம் - 500 லிட்டர் - எக்டர்) தெளிக்கவும். லிட்டருக்கு 40 மி.லி. என்ற அளவில் பிளானோபிக்ஸ் மருந்தைக் கலந்து பூக்கும் தருணத்தில் தெளிக்கவும் வறட்சியின் போது 1 சத பொட்டாசியம் குளோரைடு கரைசலைத் தெளிக்கவும் களை நிர்வாகம்  பெண்டிமெத்தலின் (எக்டருக்கு 2 லிட்டர்) மருந்தை 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் விசிறி வித தெளிப்பு முனை கொண்டு விதைத்த மூன்றாம் நாள் தெளிக்கவும் களைக்கொல்லி தெளித்த பின் தண்ணீர் பாய்ச்சவும் விதைத்த 25 - 30 ஆம் நாள் கைக்களை ஒன்று எடுக்கவும் மானாவாரி நிலங்களில் மண்ணில் ஈரப்பதம் இருந்தால் மட்டும் களைக்கொல்லி உபயோகப்படுத்த வேண்டும் களைக்கொல்லி உபயோகப்படுத்த வில்லையெனில் விதைத்த 15 மற்றும் 35 நாட்களில் கைக்களை எடுக்கவும்.

நீர் நிர்வாகம்

இறவை நிலங்களில் விதைத்தவுடன், விதைத்த 3 ஆம் நாளில் மொட்டு உருவாகும் தருணம், 50 சதவீதம் பூக்கும் தருணம் காய் வளர்ச்சியடையும் தருணங்களில் தண்ணீர் பாய்ச்சவும். நீர் தேங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் பயிர்ப் பாதுகாப்பு காய்ப்புழு மிகுதியாக காய்ப்புழு காணப்பட்டால் ஒரு எக்டருக்கு 500 மி.லி. என்.பி.வி என்ற வைரஸ்ஸை ஒரு சதம் டீபாலோடு கலந்து தெளிக்க வேண்டும் பூக்கும் பருவத்திலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை மானோகுரோடோபாஸ் (36 டபிள்யூ எஸ் சி) 625 மி.லி. என்ற அளவில் எக்டருக்கு தெளிக்க வேண்டும்.

மலட்டுத்தேமல் நோய் பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் மானோகுரோடோபாஸ் 500 மி.லி. நோய்தாக்குதல் அறிகுறிகளை கண்டவுடன் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் ஒரு லிட்டர் நீருக்கு 1.0 கிராம் கார்பென்டாசிம் கலந்து வேர்பாகத்தில் ஊற்ற வேண்டும்.

அறுவடை

 எண்பது சதவிகிதம் காய்கள் அறுவடை செய்யவும் அறுவடை செய்த துவரை செடிகளை ஓரிரு நாட்களில் அடுக்கி வைத்து பின் காயவைத்து தட்டி எடுக்கவும் சேமிப்பு அறுவடை செய்து பிரித்தெடுத்த விதைகளை 10 சதவிகிதம் ஈரப்பதத்திற்கு வரும் வரை காய வைக்க வேண்டும். வண்டுகள் தாக்காமலிருக்க 100 கிலோ விதையுடன் 1 கிலோ வேப்ப எண்ணெய் அல்லது ஊக்குவிக்கப்பட்ட களிமண் கலந்து சேமிக்க வேண்டும்.

விளைச்சல்

இறவையில் - 1160 கிலோ-எக்டர்
மானாவாரி – 915 கிலோ-எக்டர்

இவ்வாறான தொழில் நுட்ப முறைகளைக் கையாண்டு கோ (ஆர்ஜி) 7 இரகத்தை விவசாயப் பெருமக்கள் பயிரிடும் போது அதிக விளைச்சலையும், நிரந்தர வருமானத்தையும் பெற இயலும் என்பதில் எள்ளவும் ஐயமேயில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!