Idhayam Matrimony

ஊட்டி ரோஜா கண்காட்சி நிறைவு சிறந்த ரோஜா மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக்கிற்கு கிடைத்தது

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்ற 15-வது கண்காட்சியில் சிறந்த ரோஜா மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கு
கிடைத்தது.

பரிசளிப்பு விழா

கோடைவிழாவின் ஒருபகுதியாக ஊட்டியிலுள்ள ரோஜா பூங்காவில் 15_வது ரோஜா கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற விழாவிற்கு தோட்டக்கலை இணை இயக்குநர் மணி வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி சிறந்த தோட்டங்கள் மற்றும் விழாவில் அரங்குகள் அமைத்தவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பேசியதாவது-

ரோஜா இதழ் மருந்தாகும் 

நீலகிரி மாவட்டத்தில் ரோஜா காட்சி பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 15_வது ரோஜா காட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பூமியில் வாழும் உயிரினங்கள் எல்லாம் காடுகளுக்கும், மலர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கோடை விழாக்கள் நடத்தப்படுவதாக கருதுகிறேன். ரோஜா மலர்கள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகும். இதனை முதன்முதலில் தோற்றுவித்த நாடு சீனா. இந்தியாவில் ரோஜா இதழ்களைக்கொண்டு ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கப்பயன்படுத்தி வருகின்றனர். ரோஜா இதழ்கள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் மலச்சிக்கல், உடலுக்கு குளிர்ச்சி மற்றும் சூட்டுக்கொப்புளங்களை குணப்படுத்த வல்லதாகும்.

ஒவ்வொரு நிறத்திற்கும் அர்த்தமுண்டு

ரோஜாவில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அர்த்தமுண்டு. சிவப்பு ரோஜா கொத்து அன்பை தெரிவிப்பதுமாகவும், தனிசிவப்பு ரோஜா நான் உன்னை விரும்புகிறேன் என்றும், மஞ்சள் நட்பை குறிப்பதுமாகவும், மஞ்சள் பூங்கொத்தில் சிவப்பு ரோஜா நண்பர்கள் காதல்களாக மாறுகிறார்கள் எனவும், வெள்ளை ரோஜா தூய்மையின் அடையாளமாகவும், ஆரஞ்சு ரோஜா குதூகலத்தை குறிப்பதுமாகவும், ஊதா ஒருதலைக்காதலை தெரிவிப்பதாகவும், லாவெண்டர் ரோஜா கண்டவுடன் காதல் என்பதை குறிப்பதுமாகவும்,  பிங்க் ரோஜா மகிழ்ச்சியை தெரிவிப்பதுமாகவும், டீப் பிங்க் ரோஜா நன்றி கூறுவதற்கும், சிறப்பு மற்றும் வெள்ளை ரோஜா ஒற்றுமையை குறிப்பதுமாகவும் உள்ளது. இப்படி அத்தனை வண்ண ரோஜாக்களும் நமது அரசு ரோஜா பூங்காவில் இருப்பது நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை. இவ்வாறு அவர் பேசினார்.

84 பரிசு கோப்பைகள்

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 13 சுழற்கோப்பைகள், முதல் பரிசு_29, இரண்டாம் பரிசு_ 22, சிறப்பு பரிசு என  மொத்தம் 84 பரிசுகோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் இந்தாண்டு சிறந்த மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக்கிற் நிறுவனத்திற்கும்,
சிறந்த ரோஜா தோட்டத்திற்கான சுழற்கோப்பையில் முதல்பரிசு தேனாடுகம்பை மில்லேரியத்திற்கும், இரண்டாம் பரிசு கோழிப்பண்ணையில் உள்ள ஹூமன் பயோலஜிக்கல் நிலையத்திற்கும், மூன்றாவது மூன்றாவது பரிசு ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கும்  என மொத்தம் 13 சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி தோட்டக்கலைத்துறை இயக்குநர்(பொ) ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கணேஷ்(ஊட்டி), சாந்தி ராமு(குன்னூர்), மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், முன்னாள் தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன், துணை இயக்குநர்கள் சிவசுப்பிரமணியம், உமாராணி, உதவி இயக்குநர் மீராபாய், நீலகிரி ரோஜா சங்க தலைமை அமைப்பாளர் கே.கிருஷ்ணகுமார், சங்க தலைவர் ச.ராமசுப்பிரமணியம், செயலாளர் த.ஸ்ரீதரன்  மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை இயக்குநர் உமாராணி நன்றி கூறினார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ரோஜா கண்காட்சியை சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்