பிரதமர் மோடியை எதிர்க்கும் வலிமையுடன் யாருமே இல்லை: நிதிஷ்குமார்

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      அரசியல்
Nitish Kumar 2017 05 15

பாட்னா, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து நிற்க யாருமே கிடையாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

லல்லு பிரசாத் யாதவுடன் கை கோர்த்து ஆட்சியைப் பிடித்து ஆட்சி செய்து வந்த நிதிஷ் குமார் தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த லோக்சபா தேர்தலில் மோடியை எதிர்க்க யாருமே இல்லை என்று முழங்கியுள்ளார்.மோடியை எதிர்க்கும் வலிமையுடன் யாருமே இல்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராக வருவதை தடுக்கும் வல்லமை யாரிடமும் இல்லை என்றும் கூறியுள்ளார் நிதிஷ் குமார். இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், உண்மையில் பிரதமர் மீண்டும் வெற்றி பெறுவதைத் தடுக்கும் வலிமை யாரிடமும் இல்லை. இதுதான் எதார்த்தம். நான் சிறப்பாக செயல்படுவேன். சிறந்த ஆட்சியைக் கொடுப்பேன். எனது விமர்சகர்களுக்கு எனது செயல்கள் பதில் சொல்லும். எனது முடிவு சரியானதுதான் என்பதை நிரூபிப்பேன். என்னை மோடிக்கு எதிரான சரியான போட்டியாளர் என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன். நான் மோடியைப் போட்டியாக நினைத்ததில்லை என்று கூறினார் நிதிஷ் குமார்.

விளக்கம் தராத லல்லு

நான் ஊழலை பொறுத்துக் கொள்ள மாட்டேன். ஊழல் புகார்கள் குறித்து நான் லாலுவிடம் பலமுறை கேட்டும் கூட அவர் பதிலளிக்கவில்லை, விளக்கம் தரவில்லை. இதனால்தான் நான் முடிவெடுக்க வேண்டி வந்தது. அடுத்த லோக்சபா தேர்தலின்போது மோடியை எதிர்க்க யாரும் இல்லை, வலிமை இல்லை என்று நிதிஷ் குமார் கூறியிருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்ட சவாலாக கருதப்படுகிறது. என்ன செய்யப் போகிறார்கள் எதிர்க்கட்சிகள்?.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து