முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சி அமைச்சர் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      சிவகங்கை
Image Unavailable

    சிவகங்கை -   சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சியை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் திறந்து வைத்து 27 பயனாளிகளுக்கு இலவச பட்டா மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியினை வழங்கினார்.
              கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது,
            அரசுப் பொருட்காட்சி மாநில அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சி மக்களுக்கு பொழுதுபோக்காக அமைவதுடன் மட்டுமல்லாமல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. ஆண்டு ஒன்றிற்கு 10 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பொருட்காட்சி கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மேலும், அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் 4 மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள் அரங்கம் அமைப்பதற்கு ஏதுவாக துறை ஒன்றிற்கு ரூ.66,000ஃ-  வழங்கப்பட்டு வந்த நிதி தற்போது உயர்த்தப்பட்டு ரூ.70,000ஃ- ஆக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இதற்கு முன்னர் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. காரைக்குடியில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சி 187-வது பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு திட்டங்களை பெறுவதற்கு வழிமுறைகளை அறிய எளிமையாக அமையும் எனத் தெரிவித்தார்.
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
             காரைக்குடியில் இன்று அரசுப் பொருட்காட்சி 187-வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியின் நோக்கம் என்னவென்றால், சிவகங்கை மாவட்டம் பலதரப்பட்ட சிறப்புகள் வாய்ந்த மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் 17-ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சமஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 1984-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தினை பிரித்து 15.03.1985 முதல் தனி மாவட்டமாக செயல்படத் தொடங்கியது. இங்கு காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், குன்றக்குடி முருகன் கோவில் ஆகியத் திருக்கோவில்கள் பிரசித்துப் பெற்றவை. காரைக்குடி செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியம் மிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி செட்டிநாடு சமையலுக்கு புகழ் பெற்றது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் அமையப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களுக்கு நினைவுக்கூறும் விதமாக திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி கண்ட முதல் பெண்மணி ராணி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது நினைவாக சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலிக்கு நினைவுச் சின்னமும் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள்.
             கவியரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் காரைக்குடியில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குன்றக்குடியில் தெற்கு ரத வீதியில் ஆன்மீகத்தை போற்றும் வகையில் தவத்திரு குன்றக்குடி  அடிகளாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
      இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 2 அரசு சார்பு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட 13 கடைகள் இடம் பெறுகின்றன. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15ஃ-ம், சிறியவர்களுக்கு ரூ.10ஃ-ம்,  மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5ஃ-மாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 184 அரசுப் பொருட்காட்சியின் வாயிலாக அரசுக்கு ரூ.37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் நிகர வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. தற்போது 187-வது அரசுப் பொருட்காட்சியாக 23 ஆண்டுகள் கழித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகிறது. இப்பொருட்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் வாயிலாக நலத்திட்டங்களை பெறுவது குறித்து விவரங்களை நன்கு அறிந்து பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, வரவேற்புரையாற்றினார்.
   இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பிஆர்.செந்தில்நாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) திரு.உல.ரவீந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.து.இளங்கோ, மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஊடகப் பிரிவினர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து