முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபில் பற்றி அறிந்து கொள்வோமா?

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப்பற்றியும்,கடன் வாங்குபவர்களைப் பற்றி்யும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பாகும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும்.

இதனை இந்த சிபில் அமைப்பு சேகரித்து வைக்கும். இதனை வைத்து ஒருவர் வாங்கியுள்ள கடனைப்பற்றியும் அதனை திருப்பிச் செலுத்தும் அவரது திறனைப் பற்றியும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். வீடு வாங்க ஹோம் லோன்,

கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என்று கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது இந்த சிபில்ஸ்கோர் தான்.நீங்கள் வாங்கிய கடனை அடைக்க, செலுத்தும் தொகையை ஒருமுறை தாமதமாக செலுத்தினால்கூட அதனது பாதிப்பு இந்த சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும். கடன் வாங்குவபரின் சம்பளத் தொகையில் 60% அளவுக்கே அதிகபட்சம் கடன் இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் வாங்கினால்கூட அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

அதேபோல் கிரடிட்கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை பயன்படுத்திவிட்டு, குறைந்தபட்ச தொகையை செலுத்தினாலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிப்பதும் தவறு. வங்கிக்கடன் அல்லது கிரடிட் கார்டு பெற்று ஆறு மாதங்கள் கழித்தே அடுத்த கடனுக்கு அல்லது அடுத்த கிரடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிக்கடனை சரியாக செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கடனை செலுத்திய 3 மாத்தித்தில் இருந்து 6 மாதங்களுக்குள் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை விண்ணப்பித்து பெற வேண்டும். சில வேளைகளில் தாங்கள் கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியிருந்தால்கூட வங்கி அதனை சிபில் அமைப்பிடம் தெரிவிக்காமல் இருந்தால், வங்கி மேலாளரிடம் பேசி அதனை சரிசெய்ய வைக்கவேண்டும்.

எதற்கு எவ்வளவு வெயிட்டே்ஜ்? கடனை திருப்பி செலுத்தும் வகைக்கு 30%கடனி்ன் கால அளவிற்கு 25% கடனுக்கும் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் 25% கிரடிட்கார்டு பயன்படுத்துவதற்கு 20% மும் வெயிட்டேஜ் இருக்கும். இன்றைய நிலையில் கை நிறைய கடன் வாங்கிவிட்டு, அதை சரிவர திரும்பக் கட்டாமல், சிபிலில் மாட்டி கடைசியில் புதிதாக கடன் பெறும் தகுதியை இழந்து, அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பலர்.

வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி, சிபிலில் நூற்றுக்கு நூறு எடுக்க என்ன செய்ய வேண்டும்? ''வங்கிகளில் கடன் வாங்க நினைக்கிறவர்கள் முதலில் ரூ.500 செலுத்தி தங்களுடைய பெயர், தந்தை பெயர், தங்களுடைய முகவரி, பிறந்த தேதி, தொலை பேசி எண்கள் மற்றும் பான் நம்பர், ஓட்டுநர் உரிமம் எண், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் நம்பர் ஆகியவற்றில் அடையாளத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றை சிபில் அமைப்புக்கு அனுப்பி, தங்களின் சிபில் ஸ்கோர் மற்றும் தங்கள் மீது தங்களுக்கே தெரியாமல் ஏதாவது, கடன் நிலுவை உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

சிபில் ஸ்கோர்! சிபில் ஒவ்வொருவருக்கும் 300 முதல் 900 வரை ஸ்கோர் கொடுக்கிறது. ஏற்கெனவே கடன் வாங்கிய ஒருவர், இன்னொரு கடனுக்கு விண்ணப்பித்து, அவருக்கு 800-க்கு மேல் ஸ்கோர் இருந்தால், அவரது கடன் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும். அவர்களுக்கு கிரீன் சேனல் கடன் வழங்கப்படும். ஸ்கோர் 700 முதல் 800 வரை இருந்தால், ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வங்கிகள்/நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்.

ஸ்கோர் 600 முதல் 700-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின் விண்ணப்பதாரர் மேல் எந்தத் தவறும் இல்லை என்று விண்ணப்பதாரர் நிரூபித்தால், அவர்களுக்கும் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், விண்ணப்பதாரரின் ஸ்கோர் 600-க்கு கீழே இருந்தால் கடன் கேட்டு வருபவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக் கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது. விண்ணப்பத்தாரரின் ஸ்கோர் சான்றிதழில் விவரம் இல்லை என்பதை என்.ஏ. அல்லது என்.ஹெச். (NA or NH) என்று இருந்தால் அவர்கள் கடனுக்கு புதியவர்கள். இதுவரை கடந்த 2 வருடங்களில் அவர்கள் எந்த கடனும் வாங்கவில்லை என்று அர்த்தம். இது மாதிரியான புதியவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும்.

'CIBIL Score sheet-ல் XXX’ என்றோ அல்லது DPD (Days Past Dues) என்றோ போட்டிருந்தால் கவலை வேண்டாம். அவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துகிறார்கள் என்று அர்த்தம். ஸ்கோர் குறைய காரணங்கள்..! கடனை உரிய காலத்தில், உரிய தவணையில் செலுத்தத் தவறினால் ஸ்கோர் குறையும். கிரெடிட் கார்டு கடன், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை தவணையில் செலுத்தினால் அபராதத்திலிருந்து தப்பிக் கலாம். ஆனால், ஸ்கோர் உடனடியாக குறையும். அந்த தவணைக் காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் உங்கள் ஸ்கோர் குறைந்து கொண்டே போகும். நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் அதிகமாக இருந்து பெர்சனல் லோன் குறைவாக இருந்தால், உங்கள் ஸ்கோர் பாதிக்கப் படாது. அடமானம் இல்லாத கடன் (உதா. பெர்சனல் லோன்), அடமானக் கடனைவிட (உதா. வீட்டுக் கடன்) அதிகமாக இருந்தால் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும்.

உதாரணமாக மொத்த கடன் 25 லட்ச ரூபாயாக இருந்தால், இதில் கிரெடிட் கார்டு இரண்டு லட்ச ரூபாய், அடமானம் இல்லாத கடன் 12 லட்ச ரூபாய், கார் லோன் இரண்டு லட்சம் ரூபாய், வீட்டுக் கடன் 9 லட்சம் ரூபாயாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். ஏனெனில் கடனில் 44% மட்டுமே அடமானத்துடன் கூடிய கடன் (வீட்டுக் கடன்) மீதமுள்ள 56% அடமானம் இல்லாத கடன் (பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்). ஆகவே, பெர்சனல் லோன் கடனையும், கிரெடிட் கார்டு கடனையும் அதிகம் வாங்காமல் இருந்தால் ஸ்கோர் நன்றாகவே இருக்கும். வீட்டுக் கடனையும், கார் கடனையும் அதிகபட்சமாக 75% முதல் 80% வரை வாங்கி பயன் அடையலாம். ஒருவர் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்த வட்டியுள்ள ஒரே ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை அங்கு மட்டுமே விண்ணப்பித்தாலே போதும். ஒரே நேரத்தில் ஐந்தாறு வங்கிகளில் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிகளிலும் உங்கள் பெயர் விசாரிக்கப்பட்டு, அதனால் உங்கள் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டு கடனுக்கு மத்தியில் குறைந்தபட்சம் 4 முதல் 6 மாத இடைவெளி இருக்க வேண்டும்.

முடிந்த வரை யாருக்கும் கடன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருந்தால் நல்லது. அவர்கள் பணம் கட்டவில்லை என்றாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப் பட்டு உங்களுக்கு கடன் கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. கடன் கிடைக்காது! நீங்கள் கடன் வாங்கி அதை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறி இருந்தால், வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, மீதமுள்ள கடனையோ அல்லது மொத்தத் தொகையையும் தள்ளுபடி செய்திருக்கலாம். இதனால் உங்களுடைய சிபில் சான்றிதழில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது (Written-off) என்றோ, செட்டில் செய்யப் பட்டது (settled) என்றோ வரும். இந்நிலையில் உங்களை அடுத்த ஏழு வருடங்களுக்கு கறுப்புப் பட்டியலில் (Black List) சேர்த்துவிடுவார்கள். இதன் பிறகு அத்தியாவசிய கடனுக்காக நீங்கள் அழுது புலம்பினாலும் கடன் கிடைக்காது. ஐந்து கட்டளைகள்! நீங்கள் சிபிலில் அதிக ஸ்கோர் வாங்கி நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் பின்வரும் ஐந்து விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

1. உங்களுடைய இ.எம்.ஐ.-யை நிலுவை தேதிக்கு முன்னதாகவே செலுத்தி விடுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்.

2. கிரெடிட் கார்டு நிலுவையை மொத்தமாக செலுத்துவது நல்லது. குறைந்த பட்ச தொகையைச் செலுத்தி விட்டு மீதியை இ.எம்.ஐ-ல் செலுத்தக் கூடாது.

3. அடமானமில்லாத கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

4. அதிக கிரெடிட் கார்டுகள் இருந்தால் இரண்டு மட்டும் வைத்துக் கொண்டு மீதியை சரண்டர் செய்துவிடுங்கள். அதில் குறைந்த தொகையை பயன்படுத்தவும்.

5.ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் அல்லது கார் கடனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை 24 மாதங்களுக்கு சரியாக பின்பற்றி வந்தால் உங்கள் ஸ்கோர் 300-ஆக இருந்தாலும் அது 800ஆக உயர வாய்ப்பு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து