சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? இந்திய வீரர் டோனி பதில்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      விளையாட்டு
Dhoni 2019 06 07

Source: provided

லண்டன் : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து டோனி பதில் அளித்துள்ளார்.

உலக கோப்பை போட்டியில் சில ஆட்டங்களில் டோனி சிறப்பாக செயல்படாதது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. டோனி எப்பொழுதும் எதிர்பாராத வகையில் முடிவு எடுக்கக் கூடியவர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகையில் அவர் திடீரென அதிரடியாக முடிவு எடுத்தார். அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை கணிக்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஓய்வு விமர்சனங்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு டோனி அளித்த ஒரு பேட்டியில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் எப்பொழுது ஓய்வு பெறுவேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஏராளமானவர்கள் இலங்கைக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அளித்த ஒரு பேட்டியில், டோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டத்தை வெற்றிக்கரமாக முடிப்பதில் சிறந்தவராக டோனி விளங்கி வருகிறார். வருங்காலத்தில் அவரது இந்த சாதனையை யாரும் முந்த முடியாது. அவர் தனது அனுபவத்தையும், சூழ்நிலைக்கு தகுந்தபடி செயல்படும் பக்குவத்தையும் இளம் வீரர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். டோனியின் நல்ல அனுபவம் இந்திய அணிக்கு அனுகூலமாக இருக்கிறது. அதனால் அவர்கள் வெற்றிகரமான அணியாக திகழ்கிறார்கள். இந்த உலக கோப்பை போட்டியில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை மிக்க அணியாக இந்தியா விளங்கி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து