பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு மூன்று வினாடிகளிலேயே ஓ.கே. சொன்னார் விராட் கோலி : சொல்கிறார் கங்குலி

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2019      விளையாட்டு
viratkohli-ganguly 2019 11 03

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியம் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த விரும்புவதாக கூறியதுடன், அதை ஏற்றுக்கொள்ள விராட் கோலிக்கு மூன்று வினாடிகளே தேவைப்பட்டது என கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இதுவரை பிங்க் பந்தில் விளையாடியது கிடையாது. முதல்முதலாக வங்காளதேசத்திற்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருக்கும்போது, ஒரு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டது. அப்போது இந்திய வீரர்கள் போதுமான பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. இன்னும் அவகாசம் தேவை, ஆகையால் விளையாட முடியாது என்று கூறிவிட்டது.

ஆனால், பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும் இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் பகல் - இரவு டெஸ்ட் போட்டி நடத்துவது குறித்து பேசியுள்ளார். அப்போது உடனடியாக விராட் கோலி சம்மதம் தெரிவித்து விட்டதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:- நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் போட்டியை அவர்கள் ஏன் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. நான் விராட் கோலியுடன் அரைமணி நேரம் பேசினேன். முதல் கேள்வியாக நாம் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நோக்கிச் செல்வது அவசியம் என்றேன். மூன்று வினாடிகளிலேயே, அதை நோக்கிச் நாம் செல்லலாம் நாம் விளையாடுவோம் என்று பதில் அளித்தார். ரசிகர்கள் இல்லாமல் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுவது, டெஸ்ட் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சரியான வழியாக இருக்காது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.

ஒவ்வொரு டி - 20 போட்டியின்போதும் கேலரிகள் நிரம்புவது எனக்குத் தெரியும். ஆனால், நேர்த்தியான நிர்வாகத்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்க்க மீண்டும் ரசிர்களை வரவழைக்க முடியும் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து