கேரளாவில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது பாட்டி

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      இந்தியா
grand mother write eam 2019 11 20

திருவனந்தபுரம் : 6 குழந்தைகள், 15 கொள்ளுப் பேரன்கள், பேத்திகளுடன் வாழும் 105 வயது பாட்டி, கேரளாவில் எழுத்தறிவு இயக்கத்தின் சார்பில் 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வை எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் நகரைச் சேர்ந்த பாகிரதி அம்மா தனது 105 வயதில் தேர்வு எழுதியுள்ளார். 70 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை இழந்தபின், 2 மகன்கள், 4 மகள்களையும் வளர்த்துப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த நிலையில், இப்போது கல்வி கற்கும் ஆர்வத்தில் பாடம் படித்து வருகிறார். சிறுவயதிலேயே தனது தாய், தந்தையை இழந்த பாகிரதி அம்மா தனது உடன்பிறந்தவர்களை வளர்த்து விட்டபின் திருமணம் செய்து கொண்டார். 30 வயதுக்குள் 2 மகன்கள், 4 மகள்களுக்குத் தாயானார். பாகிரதி அம்மாவின் வாழ்க்கை நல்லபடியாகச் சென்ற நேரத்தில் திடீரென கணவரைப் பறிகொடுத்தார். இதனால், 4 மகள்கள் உள்பட 6 குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு அவரின் தோள்களில் விழுந்தது. அனைத்துக் குழந்தைகளையும் வளர்த்துப் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தார். தற்போது 6 பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் என மொத்தம் 15 பேரன்கள், கொள்ளுப் பேரன்களுடன் பாகிரதி அம்மா வாழ்ந்து வருகிறார்.ஆனால், 105 வயதாகியும், இவரின் குரல், பார்வையில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. தெளிவாகப் பேசவும், பாடவும் முடிகிறது. சிறுவயதில் கற்கமுடியாத கல்வியை தற்போது ஆர்வத்துடன் கற்று வருகிறார்.கேரள அரசின் மாநில எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தற்போது பாகிரதி அம்மா கல்வி கற்று வருகிறார்.

எழுத்தறிவு இயக்கத்தின் அதிகாரி வசந்த குமார் நிருபர்களிடம் கூறுகையில், " பாகிரதி அம்மா தனது முதுமையின் காரணமாக எழுதுவதில் அவருக்குச் சிரமம் இருக்கிறது. 3 பாடங்களில் தேர்வு எழுத 3 நாட்கள் ஆனது. சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் ஆகியவற்றில் தேர்வு எழுத அவருக்குச் சிரமம் இருந்தது. இதனால், அவரின் இளைய மகள் அவருக்கு உதவியாக எழுதினார். 105 வயதாகியும் பகீரதி அம்மாவின் நினைவு கூர்மையாக இருக்கிறது. பார்வையிலும் எந்தவிதமான குறையும் இல்லை, நன்றாகப் பாடுகிறார். பகீரதி அம்மா தனது 9-வது வயதில் 3-ம் வகுப்போடு தனது கல்வியை முடித்துக்கொண்டார். தற்போது 4-வது வகுப்புத் தேர்வு எழுதியது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது எனத் தெரிவித்தார். 105 வயதாகும் இவர் இதுவரை கேரள அரசிடம் இருந்து நிதியுதவியாக விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என எதையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து