தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மூலம் பொதுமக்களை சந்திக்க அஞ்சுகிறார் ஸ்டாலின் - கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      தமிழகம்
cm edapadi interview 2019 12 08

கோவை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது. பொதுமக்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சுகிறார் என்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக 27 மாவட்டங்களில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

முதல்வர் பேட்டி

அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என்பதை மு.க. ஸ்டாலின் தற்போது தெளிவுபடுத்தி விட்டார். ஒவ்வொரு முறையும் ஏதாவது குற்றம், குறை சொல்லி அவர் இந்த தேர்தலை தள்ளிப் போட பார்க்கிறார். கடந்த மே மாதமே வார்டு வரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டு விட்டது. இதில் ஆட்சேபனை இருந்தால் கூறலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 7 மண்டலங்களில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதன் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் வார்டு வரையறையும் செய்யப்பட்டது. தற்போது சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முதலில் இதை வரவேற்று விட்டு தற்போது மீண்டும் கோர்ட்டுக்கு போகிறார். எந்த வார்டில் பிரச்சினை, இட ஒதுக்கீட்டில் என்ன பிரச்சினை என்று கூறாமல் நீதிமன்றம் செல்கிறார்.

ஸ்டாலினின் நோக்கம்

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்பதே இவரது நோக்கமாக உள்ளது. இதுவரை அ.தி.மு.க. மீது பழி போட்டு வந்தார். உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு தள்ளிப் போடுவதாக குற்றம் சாட்டி வந்தார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றமே தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. 27 மாவட்டங்களில் நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதனடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது.

மக்களை சந்திக்க அஞ்சுகிறார்

ஆனால் மு.க. ஸ்டாலின் 2016-ல் எப்படி நீதிமன்றத்தை நாடினாரோ, அதே போல் இப்போதும் நீதிமன்றத்தை நாடுகிறார். இப்படி குற்றம் சொல்லி சொல்லியே தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஆனால் இதை ஸ்டாலின் வரவேற்று விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு போகிறார். இந்த தேர்தல் மூலம் மக்களை சந்திக்கவே அவர் அஞ்சுகிறார். தேர்தலை சந்திக்க தில் இருக்கா? என்று அவர் அடிக்கடி கேட்பார். இப்போது நாங்கள் கேட்கிறோம். தேர்தலை சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

15 நாளில் சரியாகும்

வெங்காய விலை உயர்வு பற்றி கேட்ட போது, மழை கனமாக பெய்வதால் வெங்காய விலை உயர்ந்துள்ளது. இன்னும் 15 நாளில் எல்லாம் சரியாகி விடும் என்று பதிலளித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். சாலைகளை சீரமைத்துள்ளோம். இப்படி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு விஷமத்தனமாக பேசி மக்களை குழப்ப பார்க்கிறார். அவரது முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து