அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள் : ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்: அம்மா பேரவை கூட்டத்தில் முதல்வர் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
cm edapadi meet 2020 01 20

சென்னை : அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட  உதவி வழங்குங்கள் என்று சென்னையில் நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  வேண்டுகோள் விடுத்தார்.

அம்மா பேரவை கூட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நேற்று மாநில அம்மா பேரவையால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசியதாவது:

 மறைந்த முதல்வர் அம்மாவின்  72 - வது பிறந்த நாள் விழாவை  சீரோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதற்காக கழக  அம்மா பேரவையின் சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எழுச்சிமிகு சிறப்பான நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமையுரையாற்றிய  அமைச்சர், அருமை சகோதரர்  ஆர்.பி. உதயகுமார் அவர்களே, எனக்குப் பின்னாலே சிறப்பான கருத்துக்களை வழங்க இருக்கின்ற கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர்  துணை முதலமைச்சர் மரியாதைக்குரிய ஓ.பன்னீர்செல்வம் அவர்களே மற்றும் அனைவருக்கும் வணக்கம்,

ஏழைகளுக்கு உதவுங்கள்

 அம்மா அவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவி. தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு உழைத்து மக்களிடத்திலே, இதயத்திலே குடியிருந்த தலைவி என்று சொன்னால் அது அம்மா என்று சொல்வார்கள். இன்றைக்கு பெற்ற அம்மாவை அம்மா என்று சொல்லுகின்றோமோ, இல்லையோ, ஆனால் அம்மா என்று  சொன்னால் அம்மாவைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காக உழைத்து, தன் உடலில் ஏற்பட்ட நோயைக்கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவி அம்மா. அம்மாவினுடைய பிறந்த நாள் விழா எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

வருவாய்த் துறை அமைச்சர், கழக அம்மா பேரவையினுடைய செயலாளர் இங்கே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றார். அம்மா இருக்கின்றபொழுது குறிப்பிடுவார்கள். நீங்கள் ஏதாவது ஏழைகளுக்கு செய்யுங்கள், அது எனக்கு  மகிழ்ச்சியை தரும் என்று சொல்வார்கள். அதேபோல, வருகை தந்திருக்கின்ற நிர்வாகிகள் நம்முடைய ஒன்றிய, நகர, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் இருக்கின்ற அத்தனை பேரவையினுடைய நிர்வாகிகளும் ஒத்துழைப்போடு இன்றைக்கு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள். உங்களுடைய வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினால் தான் அந்த விழா என்று நினைத்து விடாதீர்கள், மனம் இருந்தால் போதும்.  அம்மா என்ற தெய்வம் நம் உள்ளத்திலே இருக்கின்றார் என்பதை அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு எடுத்துக்காட்டுகின்ற விதமாக, தங்களால் இயன்ற அளவிற்கு ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். இங்கே இருக்கின்ற முதியவர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை கொடுங்கள், அன்னதானம் வழங்குங்கள், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்குங்கள், அவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள். மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு பழங்கள், பால், ரொட்டி போன்றவற்றை வழங்கலாம். மேலும் வசதி இருந்தால், அந்த மருத்துவமனைக்குத் தேவையான பொருட்களை வழங்கலாம், படுக்கை வழங்கலாம், கட்டில் வழங்கலாம் அந்தப் பகுதியில் இருக்கின்ற நிர்வாகிகள் தங்களது நிதி வசதிக்கேற்றவாறு இப்படி ஏதாவது உதவிகள் செய்தால், அது  அம்மாவுக்கு செய்கின்ற நன்றி என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு, அம்மா அவர்கள் கட்சியை இமை காப்பதைப் போல காத்தார்கள். அதனால்தான் இன்றைக்கு நாம் வளர்ந்து இந்த இடத்தில் குழுமியிருக்கின்றோம் என்று சொன்னால், அம்மாவினுடைய உழைப்பால் இன்றைக்கு  நிமிர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை நாம் அடைந்திருக்கிறோம். அந்த வகையிலே, நாம் அத்தனை பேரும் அம்மாவின் அன்பைப் பெற்றவர்கள். அதற்கு நன்றிக் கடனாக அம்மா மீது பற்றுள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டங்களை சொல்லுங்கள்

இங்கே வருகை தந்திருக்கின்ற நிர்வாகிகள், அரசாங்கம் போடுகின்ற திட்டங்களை முழுமையாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஏராளமான திட்டங்களை நாம் மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். ஆனால், நாம் போட்ட திட்டங்கள், இன்னும் முழுமையாக கிராமத்திலிருந்து நகரம் வரை உள்ள மக்களுக்கு போய் சேரவில்லை. ஏனென்றால், திட்டம் போய் சேர்ந்திருக்கின்றது, ஆனால் நாம் போட்ட திட்டங்களை மக்களுக்குப் புரிய வைக்கவில்லை. அதை, நம்முடைய பேரவை நிர்வாகிகள் புரிய வைக்க வேண்டும். ஏனென்றால், பேரவை நிர்வாகிகள் இந்த இயக்கத்திற்கு இதயம் போன்றவர்கள். அப்படி நீங்கள் இருக்கின்ற காரணத்தினாலே தன்னலம் இல்லாமல் சேவை செய்வதற்குத்தான் அம்மாவினுடைய பேரவை அப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது. நான் 1985-ஆம் ஆண்டில் பேரவையில் இருந்தவன் என்ற முறையிலே நான் சொல்கின்றேன், பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கின்றோம். அதேபோல, நீங்களும் பேரவையிலே தன்னலமற்று சேவை புரிகின்றபொழுது உயர்ந்த இடத்திற்கு எதிர்காலத்தில் வருவீர்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அம்மாவினுடைய 72-வது வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக, எழுச்சியாக, அனைத்து மக்களும் போற்றுகின்ற அளவிற்கு, பாராட்டுகின்ற அளவிற்கு உங்கள் பணிகள் அமைய வேண்டும் என்று வாழ்த்தி, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து