நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      இந்தியா
suprem-court 2020 01 28-

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.  

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.  முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முகேஷ் சிங்கின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு, நேற்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் விசாரணை நடத்தினர். 

கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்த நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததாக, முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார். மரண தண்டனை தொடர்பான தீர்ப்புகளையும், கருணை வழங்குவது தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்றும், அவருக்கு கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். கருணை மனு பரிசீலனைக்காக, வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், முகேஷ் சிங்கின் மனு மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக தெரிவித்தனர்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து