பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம்: முதல்வர் எடப்பாடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
CM Photo 2020 07 28

Source: provided

சென்னை : பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஐயப்பன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்பிரமணியன் விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  மதுராந்தகம் வட்டம், வடக்குபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முரளியின் மகன் சிறுவன் தரணேஷ், ரவியின் மகன்கள் சிறுவன் ராஜா மற்றும் சிறுவன் ஆகாஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் செல்வன் கோவர்தனன் சுற்றுலா சென்ற இடத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

சோளிங்கர் வட்டம், புதூர் மதுரா மாலையமேடு கிராமத்தைச் சேர்ந்த தேசன் மகள் செல்வி அஷ்வினி, சங்கர் மகன் செல்வன் தமிழரசன் மற்றும் உலகநாதன் மகள் செல்வி ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் வேடந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், குளக்காட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பாண்டீஸ்வரன் ஆற்றில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம்,  முஞ்சிறை கிராமத்தைச் சேர்ந்த விஜீமோன் இயக்கிய JCB இயந்திரத்தின் மீது பாறை விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கிள்ளியூர் வட்டம், மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் மகள் செல்வி விர்ஜின் பெர்னதெத் தனியார் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன்  ராமச்சந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகண்ணன்  மகன் கார்த்திகேயன் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, எதிர்பாரத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமியின் கணவர் சேதுராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் நவீன்குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சத்தியமங்கலம் வட்டம், புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகணேஷ்  மகன் சிறுவன் கவியாணேஷ் என்பவர் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

ஈரோடு வட்டம், வீரப்பன்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமார்(லேட்) மகன் மணிகண்டன்  திருமூர்த்தி அணையில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

சத்தியமங்கலம் வட்டம், சுங்ககாரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ரங்கசாமி தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  அந்தியூர் வட்டம், முகாசிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த  நல்லாக்கவுண்டர் மகன் ரத்னகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த  சிவசங்கரி மற்றும் அவரது கணவர்  கணேசன் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கழுவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த தனபாலன் மகன் செல்வன் நவீன் மற்றும் முருகன் என்பவரின் மகன் செல்வன் சபரிதரன் ஆகிய இருவரும் ஊரணியில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், 

அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், பனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த  கலியபெருமாள் மகன் ரகுராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கோரணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்த்தனாரி மகன் செல்வன் மணிகண்டன் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

மேட்டூர் வட்டம், குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன் செல்வம் வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  எடப்பாடி வட்டம், செட்டிமாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்  மகன் உத்திரகுமார் மாடு முட்டி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

மேட்டூர் வட்டம், கூணாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவின் கணவர் கனகராஜ் (எ) கருமலை கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், ஒரகடம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் கோபியின் மகன் செல்வன் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், கருத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாத்தப்பனின் மகன் கோவிந்தராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த  31 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பத்திற்கு  தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து