விஜயகாந்த் உடல்நிலை தேற இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வாழ்த்து

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
vijayakanth-2020 09 24

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவரது உடல் நிலை குறித்து அவரது மனைவியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த்துக்கு 22-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. 

தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,  விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கொரோனா இல்லை. 

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி அறிந்து, அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்திடம், விஜயகாந்த் உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து