சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

புதன்கிழமை, 11 நவம்பர் 2020      ஆன்மிகம்
Sabarimala-stampede 2020 11

சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை  

இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகாராஜாவின் பிறந்த நாள் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 

தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின், இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மீண்டும் மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 2020-2021 ஆண்டுகளுக்கான புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு சடங்கு நடைபெறும்.

முன்னதாக புதிய மேல்சாந்திகளுக்கான அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் சபரிமலை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மறுநாள் 16-ந் தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்கள். தொடர்ந்து அதிகாலை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26 - ந் தேதி நடைபெறும்.

மகரவிளக்கு பூஜை 2021 ஜனவரி 14 - ந் தேதி நடைபெறும். நவம்பர் 16-ந் தேதி முதல் 2021 ஜனவரி 19-ந் தேதி வரையிலான அனைத்து தினங்களுக்கான ஆன் லைன் தரிசன முன்பதிவு நிறைவு பெற்றுவிட்டது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து