சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      இந்தியா
Uddhav-Thackeray 2020-11-28

Source: provided

மும்பை : இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

மராட்டியத்தில் சுமார் 30 ஆண்டு கால நட்பு கட்சிகளாக பா.ஜனதா, சிவசேனா விளங்கி வந்தது. இதன் அடையாளமாக கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை சிவசேனா - பா.ஜனதா கூட்டணி அரசும், 2014 முதல் 2019 வரை பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசும் மராட்டியத்தை ஆட்சி செய்தன.  ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவை தொடர்ந்து அரசியல் நிலவரம் எதிர்பாராத திருப்பதை கண்டது. கொள்கை முரண்பாடு மற்றும் அரசியல் எதிரிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து சிவசேனா கூட்டணி அரசை அமைத்தது. அந்த அரசு அமைந்து நேற்றுடன்(சனிக்கிழமை) ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் 60 வயதான முதல்வர்  உத்தவ் தாக்கரே  தனது கட்சி பத்திரிகையான சாம்னாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட முடியாது. பழிவாங்கும் அரசியலுக்கு முடிவே கிடையாது. எனவே அதற்கு நான் ஆதரவானவன் கிடையாது. நெறி தவறிய இந்த அரசியலை நிறுத்துங்கள். அடுத்த 4 ஆண்டுகள் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை நிறைவு செய்வோம். அதன்பிறகு நடப்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சிலர் இந்த 3 கட்சிகள் சேராது. சிவசேனா தங்களது (பா.ஜனதா) பின்னால் தான் வரும் என நினைத்தார்கள்.  மும்பை (மும்பை மாநகராட்சி) சிவசேனாவின் கோட்டை. அதை தகர்க்க மும்பை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

சில நாட்களுக்கு முன்பு சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிக் கொண்டது. இவை உள்ளிட்ட மராட்டிய ஆட்சியாளர்கள் சார்ந்த வழக்குகளை மத்திய விசாரணை முகமைகள் கையில் எடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி உத்தவ் தாக்கரே இவ்வாறு குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து