தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Weather-Center 2020 11 12

Source: provided

சென்னை : வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. பல இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று தெரிகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லேசான மழையும் பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து வருகிற 18, 19-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், ஈச்சன்விடுதியில் தலா 9 செ.மீ., ராமநாதபுரம் 8 செ.மீ., திருத்துறைப்பூண்டி, பாபநாசம், மண்டபம் தலா 7 செ.மீ., மணிமுத்தாறு, ராமேசுவரம், தலைஞாயிறு தலா 6 செ.மீ., காயல்பட்டினம் 5 செ.மீ. உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து