சென்னை : வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கிறார்.
ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
இதையடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார். பல்வேறு தரப்பினரை தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் புதுச்சேரி வந்து மீனவ மக்களை சந்தித்தார்.
இந்த நிலையில் வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கிறார். 27-ம் தேதி தனி விமானத்தில் தூத்துக்குடி வரும் அவர், அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். திறந்த வேனில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
அவர்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். 27-ம் தேதி இரவு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் ராகுல்காந்தி பேசுகிறார். இதில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபிமனோகரன் செய்து வருகிறார். மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் நிறைவு பெறுகிறது. ராகுல்காந்தியின் முழுமையான சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைக்குள் வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.