முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹரித்வார் கும்பமேளா கால அளவு ஒரு மாதமாக குறைப்பு: பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்

சனிக்கிழமை, 27 மார்ச் 2021      ஆன்மிகம்
Image Unavailable

வரலாற்றிலேயே முதல் முறையாக ஹரித்வார் கும்பமேளாவின் கால அளவு ஒரு மாதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பக்தர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

உத்தரகாண்டின் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புகழ்பெற்ற கும்பமேளா நடைபெறுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கும்பமேளாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கங்கையில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றனர்.  பொதுவாக சுமார் மூன்றரை மாதங்கள் நடைபெறும் இந்த கும்பமேளா கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 14 முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை ஹரித்வாரில் நடந்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கும்பமேளா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக தீவிரமாக நடந்து வந்த நிலையில்தான், கொரோனா பெருந்தொற்று உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.  இந்தியாவில் குறைந்து வந்த இந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நாட்டில் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இதில் குறிப்பாக கும்பமேளா நடைபெறும் உத்தரகாண்டுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கும்பமேளாவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி சிறப்பு அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.  இதில் முக்கியமாக இந்த ஆண்டு கும்பமேளா வெறும் ஒரு மாதமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 1 முதல் 30-ம் தேதி வரை இந்த கும்பமேளா நடைபெறுகிறது. 

இதில் ஷாகி ஸ்நான் எனப்படும் முக்கியமான புனித நீராடல் ஏப்ரல் 12, 14 மற்றும் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் சைத்ர பிரதிபாடா மற்றும் ராம நவமியையொட்டி முறையே ஏப்ரல் 13 மற்றும் 21-ம் தேதிகளிலும் அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த கும்பமேளாவையொட்டி பக்தர்கள் புனித நீராடும் இடங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ள மாநில அரசு, கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. புகழ்பெற்ற கும்பமேளாவின் கால அளவு ஒருமாதமாக குறைக்கப்பட்டு இருப்பது வரலாற்றிலேயே முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து