'ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் - பிராவோ'மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கிய சி.எஸ்.கே. புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

Ritu---Bravo 2021 09 20

Source: provided

துபாய் : துபாயில் தொடங்கிய ஐ.பி.எல்.லின் 2-ம் பகுதி முதல் ஆட்டத்தில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெற்றது. ருதுராஜ் - பிராவோவின் ருத்ர தாண்டவத்தில் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை.

12 புள்ளிகள்...

ஐ.பி.எல் 2021 டி-20 கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐ.பி.எல் அட்டவணையில் 12 புள்ளிகளுடனும் +1.223 என்ற அபார ரன் விகிதத்திலும் முதலிடம் பிடித்தது.

156 ரன்கள்... 

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே அடித்தது. சென்னை வீரர் ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனார். 

ருதுராஜ் - பிராவோ...

முன்னதாக சென்னை தனது இன்னிங்ஸில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமாக ஆடி அரைசதம் கடந்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பேட்டிங்கில் அவருக்கு உதவிய பிராவோ, பௌலிங்கிலும் சிறப்பாக பங்களித்தார்.

பொல்லார்ட் ...

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து தொடரில் கண்ட லேசான காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ரோஹித் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக கிரன் பொல்லார்ட் மும்பை கேப்டனாக செயல்பட்டார்.

அடுத்தடுத்து விக்கெட்...

சென்னையின் இன்னிங்ஸை ருதுராஜ் - டூ பிளெஸ்ஸிஸ் தொடங்கினர். இதில் டூ பிளெஸ்ஸிஸ் 3 பந்துகளில் டக் அவுட்டாக, அடுத்து வந்த மொயீன் அலியும் அதேபோல் வெளியேறினார். 4-வது வீரராக களம் புகுந்த ராயுடு ரன் எடுக்காமல் ‘ரிட்டையர்டு ஹர்ட்’  ஆனார். 

டோனி - ஜடேஜா...

ஒரு புறம் இப்படி சரிய, மறுபுறம் விக்கெட்டை இழக்காமல் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் விளாசி அணிக்கு நம்பிக்கை அளித்தார் ருதுராஜ். 5-வது வீரராக வந்த ரெய்னா ஒரு பவுண்டரி மட்டும் விளாசி விக்கெட் இழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் டோனி 3 ரன்களுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களம் புகுந்த ஜடேஜா சற்று நிலைத்து ஆடினார். 5-வது விக்கெட்டுக்கு ருதுராஜ் - ஜடேஜா ஜோடி 81 ரன்கள் சேர்த்தது. ஒரேயொரு பவுண்டரி மட்டும் விளாசிய ஜடேஜா 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ருது 88 ரன்கள்...

மறுபுறம் ருதுராஜ் அரைசதம் கடந்து அசத்தி வர, 8-வது வீரராக வந்த டுவெய்ன் பிராவோ அதிரடியாக விளையாடி 3 சிக்ஸர்கள் உள்பட 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஓவர்கள் முடிவில் ருதுராஜ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 88, ஷர்துல் தாக்குர் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் ஆடம் மில்னே, ஜஸ்பிரீத் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

சௌரவ் திவாரி... 

பின்னர் 157 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மும்பையில் சௌரவ் திவாரி அதிகபட்சமாக 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எஞ்சியோரில் டி காக் 17, அன்மோல்பிரீத் 16, சூர்யகுமார் யாதவ் 3, இஷான் கிஷண் 11, கேப்டன் கிரன் பொல்லார்ட் 15, கிருணால் பாண்டியா 4, ஆடம் மில்னே 15, ராகுல் சாஹர் 0 என விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பிராவோ 3 விக்கெட்...

சென்னை பௌலிங்கில் பிராவோ 3, தீபக் சாஹர் 2, ஜோஷ் ஹேஸில்வுட், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

மீண்டும் முதலிடம்...

சென்னை அணி  8 ஆட்டங்களில் 2 தோல்வி 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.  டெல்லி கேப்பிடல்ஸ் 8 ஆட்டங்களில் 2 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

ரிவ்யூ கேட்ட டோனி!

மும்பை அணியின் இன்னிங்ஸில் தீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டிகாக் பந்தை மிஸ் செய்ததால் அது அவர்களது பேடில் பட்டது. அதற்கு சென்னை அணி அப்பீல் செய்ய அம்பயர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் நாட்-அவுட் கொடுத்தார். 

உடனடியாக சென்னை அணியின் கேப்டன் டோனி, அம்பயரின் முடிவுக்கு எதிராக ரிவ்யூ சென்றார். அது டிவி அம்பயர் ரிவ்யூவில் பந்து ஸ்டம்பில் பட்டது தெளிவானது. அதன் மூலம் சென்னை அணி முதல் விக்கெட்டை கைப்பற்றியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து