முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல்: 9 மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பதவிகளையும் வென்றது தி.மு.க

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பதவிகளையும் தி.மு.க வென்றுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிகளையும் பெருமளவில் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக  பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர்,  ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு  கட்டங்களாகவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி  பிரதிநிதிகளுக்கான தேர்தல் கடந்த 9ம் தேதியும் நடைபெற்றது. இதற்கான வாக்கு  எண்ணிக்கை கடந்த 12ம்தேதி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 5 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 137 கிராம  ஊராட்சி தலைவர்கள், 3221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

151 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 1415  ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2865 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 19964  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி  பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த  ஊராட்சிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன் பதவியேற்றனர். இவர்கள் நேற்று நடந்த தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வாக்களித்தனர். 

9 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 9 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3002 கிராம பஞ்சாயத்துகளின் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு நேற்று காலை 10 மணி முதல் மறைமுக தேர்தல் நடைபெற்றது. 

இதில் 9 மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பதவிகளையும் தி.மு.க வென்றுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிகளையும் பெருமளவில் கைப்பற்றியுள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு நடந்த மறைமுகத் தேர்தல் முடிவுகள் வருமாறு., காஞ்சிபுரத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியதால் தி.மு.க வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டை பொறுத்தவரை 16 உறுப்பினர்களில் 15 இடங்களில் தி.மு.கவும், 1 இடத்தை அ.தி.மு.கவும் கைப்பற்றிய நிலையில், தி.மு.க வேட்பாளர் செம்பருத்தி மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விழுப்புரத்தில் 28 உறுப்பினர்களில் தி.மு.க கூட்டணி 27 இடங்களையும், அ.தி.மு.க 1 இடத்தையும் கைப்பற்றியது. இதனால் தி.மு.க வேட்பாளர் ஜெயசந்திரன் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சியில் 19 இடங்களையும் தி.மு.க கைப்பற்றியதால் தி.மு.க வேட்பாளர் புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வேலூரிலும் 14 இடங்களில் அனைத்து இடங்களையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியது. இதனால் தி.மு.க வேட்பாளர் மு.பாபு மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.திருப்பத்தூரை பொறுத்தவரை 13 இடங்களையும் தி.மு.கவே கைப்பற்றியதால் அக்கட்சியை சேர்ந்த சூர்யகுமார் போட்டியின்றி தேர்வானார். ராணிப்பேட்டையிலும் மொத்தம் உள்ள 13 இடங்களை தி.மு.க கைப்பற்றியதால் ஜெயந்தி மூர்த்தி போட்டியின்றி தேர்வானார்.

தென்காசியில் 14 இடங்களில் தி.மு.க 10 இடங்களையும், கூட்டணி கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றின. இதனால் தி.மு.க வேட்பாளர் தமிழ்செல்வி மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலியில் மொத்தம் உள்ள 12 இடங்களில் தி.மு.க கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியதால் தி.மு.க வெப்பாளர் ஜெகதீஷ் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதில் திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டார். தி.மு.கவை சேர்ந்த ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிகளையும் பெருமளவில் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து