முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசிபுரத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள முந்திரி லாரி கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மகன் கைது

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ராசிபுரம் : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கிருந்து 8 டன் எடையுடைய ரு.1.10 கோடி மதிப்பிலான முந்திரி லோடை ஏற்றி கொண்டு ஜப்பான் நாட்டிற்கு அனுப்புவதற்காக தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி லாரி புறப்பட்டது. தூத்துக்குடி ஹரி என்பவர், லாரியை  ஓட்டி வந்தார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே லாரி வந்தபோது மர்மநபர்கள் சிலர் வழிமறித்தனர். பின்னர் ஹரியை கத்தியை காட்டி மிரட்டி கீழே இறக்கி விட்டனர். பின்னர் அந்த மர்மகும்பல், முந்திரி லோடுடன் லாரியை கடத்தி சென்றது.  

இதுகுறித்து முந்திரி ஆலையின் மேலாளரான ஹரிகரனுக்கு ஹரி தகவல் கொடுத்தார். உடனே ஹரிகரன், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார், முந்திரி லோடுடன் கடத்தி செல்லப்பட்ட லாரியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே முந்திரி லோடு லாரி நாமக்கல் நோக்கி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்படி போலீசார் நாமக்கல் விரைந்து வந்தனர். இதனையறிந்த கும்பல், நேற்று அதிகாலை 1 மணியளவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் முந்திரி லோடுடன் லாரியை நிறுத்தி விட்டு தப்பியது. இதையடுத்து மேட்டுக்காடு பகுதிக்கு வந்த தனிப்படை போலீசார், முந்திரி லோடுடன் லாரியை மீட்டனர்.

இதனிடையே, நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான திம்மநாயக்கன்பட்டி பகுதியில் வந்த காரை, தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த 7 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், முந்திரி லோடு லாரியை காரில் வந்த கும்பல்தான் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் உள்பட 7 பேர் அந்த காரில் இருந்ததும், இவர்கள்தான் கடத்தலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 7 பேரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!