முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய் வழக்கு போட்டு கட்சியில் சேருமாறு அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுவதா? - தி.மு.க.வுக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் போடுவதாக தி.மு.க. மீது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 22.10.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில், கழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் 4 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்று கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  எம்.ஆர். விஜயபாஸ்கர்,  கடந்த 21.10.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார்.

மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மிரட்டப்பட்டு வந்தனர். இந்நிலையில், தேர்தல் நாளான 22.10.2021 அன்று 4 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட தி.மு.க. வெற்றிபெற முடியாது என்பதால், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளுங் கட்சியினரின் மிரட்டலுக்குப் பயந்து தேர்தலை தள்ளி வைத்துள்ளார். தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார், கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் கேட்டபோது, காவல் துறை அதிகாரிகளை வைத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

அதன் பிறகு, தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்று கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.  நீதியரசர்கள் தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும், தேர்தலை நேர்மையாக நடத்தவும், தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தேர்தலில் தோற்று விடுவோம் என்று தெரிந்துகொண்ட மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர்  அசோக்குமார் தூண்டுதலின்பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை வைத்து, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு 2-வது வார்டு உறுப்பினர் அலமேலுவின்  கணவர் மீது, குட்கா வைத்திருந்ததாக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் காவல் துறையினர் இரண்டு பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர். அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படவே, தங்கள் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி அவர்கள் கடந்த 18.11.2021 அன்று தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர்.

அதே போல், கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு 10-வது வார்டு உறுப்பினர் நல்லமுத்து வடிவேலுவுக்கு  சொந்தமான நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று, நிறுவனத்தை சீல் வைப்பதாக மிரட்டியும்,  ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடுப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து 23.11.2021 அன்று  நல்லமுத்து வடிவேல்  தி.மு.க.வில் சேர்ந்து விட்டார்.

இதுபோல், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள், மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கழகத்தின் ஆதரவாளர்கள் அனைவரையும் தி.மு.க.வில் சேருமாறு, மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் தி.மு.க.-வில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள் தொழில் செய்ய முடியாத அளவிற்கு தி.மு.க.வினர், அதிகாரிகளை வைத்து மிரட்டியும் வருகின்றனர். நேர்மையாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தி.மு.க.விற்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. மேலும், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சந்திக்க முடியாத திராணியற்ற திமுக-வை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து