முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை டெஸ்ட் கிரிக்கெட்: 62 ரன்களுக்குள் நியூசி.யை சுருட்டி வலுவான நிலையில் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றது

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி அபார பந்திவீச்சால் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியை 62 ரன்களுக்குள் சுருட்டியது. ஃபாலோ ஆன் கொடுக்காத இந்திய அணி தொடர்ந்து ஆடி 2-ம் நாள் முடிவில் 332 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

2-வது நாள்...

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.  முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான நேற்று காலை ஆட்டம் தொடர்ந்த நிலையில் மேலும் 2 ரன்கள் சேர்த்த சகா ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் அஜாஸ் படேல் பந்துவீச்சிற்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.  பின்னர் வந்த அக்ஸர் படேல் மயங்க் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 

அக்ஸர் அரைசதம்...

அரைசதம் அடித்த அக்ஸர், 52 ரன்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். எனினும்  தொடர்ந்து விளையாடிய மயங்க் அகர்வால் 150 ரன்களை குவித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. 

62 ரன்களுக்குள்... 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக  ஜேமிசன் 17 ரன்களும், லாதம் 10 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். 

2-வது இன்னிங்ஸ்..

இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டுகளும், அக்ஸர் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தார்.  இதையடுத்து நியூஸிலாந்து பாலோ ஆன் ஆனது. ஆனாலும், ஃபாலோ ஆன் கொடுக்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 

332 ரன்கள் முன்னிலை...

நேற்று 2-ம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்து மொத்தம் 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும், புஜாரா 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த வலுவான நிலை தொடர்ந்தால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!