முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75-வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார் : விருதுகள், பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார். 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா, இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து காரில் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுசின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும், பின்னாலும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வருகின்றனர். கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திறங்குவார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்பார். 

அங்கு தென் இந்திய பகுதிகளின் தலைமைப்படை தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படை தள விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்வரை தலைமைச்செயலாளர் அழைத்து செல்வார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். 

அதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு முதல்வர் வருவார். அங்கிருந்தபடி மூவர்ண தேசிய கொடியை காலை 9 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைக்கிறார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்க விடப்படும். போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைப்பார்கள். அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி நிகழ்த்துவார். 

அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர், வேலைவாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், டாக்டர் ஆகியோருக்கான விருதுகளை முதல்வர்  வழங்குகிறார். அதைத்தொடர்ந்து சமூகப்பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருது வழங்கப்படும். பின்னர் விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. சுதந்திர தின விழாவின்போது, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக பெருமளவில் கூட்டம் கூடுவதை மாநில அரசுகள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. இந்த விழாவில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் நேரில் பங்கேற்க வேண்டாம் என்றும், சுதந்திர தின விழாவை டி.வி.யில் கண்டு மகிழுங்கள் என்றும் அனைவருக்கும் கடந்த ஆண்டில் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. 

இந்த ஆண்டும் அதுபோன்ற அறிவிப்பை தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமருவதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே சமூக இடைவெளி விட்டு தனித்தனியான பந்தல்களில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் முககவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டு உள்ளது. விழாவில் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று சிறப்பிப்பிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக ஜார்ஜ் கோட்டை உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து