முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் தகுதி நீக்கம்: மாநிலம் முழுவதும் நாளை முதல் போராட்டம் நடத்த காங். திட்டம்: கே.எஸ்.அழகிரி

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
KS-Alagiri 2023 03 25

Source: provided

சென்னை : ராகுலின் தகுதி  நீக்கத்தை தொடர்ந்து மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை முதல் காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள், பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த கட்டமாக காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி. வேணுகோபால் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் கலந்து கொண்டார். இந்த ஆலோசனையின் போது பரிமாறப்பட்ட கருத்துக்கள் பற்றி அவர் கூறியதாவது:- 

மோடி அரசு பழிவாங்கும் எண்ணத்துடன் நடந்திருப்பது தெளிவாகி இருக்கிறது. இந்த பிரச்சினையை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அணுக முடிவு செய்துள்ளோம். வருகிற 27-ம் தேதி முதல் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மிகப்பெரிய கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது பற்றிய திட்டங்களை அகில இந்திய தலைமை வகுத்து அறிவிக்கும். 

இந்த கூட்டங்கள், போராட்டங்கள் வாயிலாக பா.ஜ.க. அரசு எதிர்கட்சிகளை எப்படியெல்லாம் நசுக்குகிறது என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்துவோம். உலக அளவில் பல சர்வாதிகாரிகள் பின்பற்றியது போல் பிரதமர்  மோடியும் சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதை விளக்குவோம். மோடியின் இந்த சர்வாதிகார போக்கும், நடவடிக்கையும் காங்கிரசுக்கு மட்டுமல்ல ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து கட்சிகளுக்கும் ஆபத்து என்பதையும் மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வோம். 

மற்றொரு பக்கம் நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். 2024 தேர்தலில் சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டு ஜனநாயகத்தை தழைக்க வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து