முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி

திங்கட்கிழமை, 27 மே 2024      தமிழகம்
Mullaperiyar-dam 2023 07-11

கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் ”முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக் கணக்கான மக்கள், வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தற்போதுள்ள அணைக்கு 1,200 அடிக்குக் கீழே புதிய அணையை கட்டிய பின், பழைய அணையை இடிக்க அனுமதி வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டிமுடிக்கப்பட்ட பின்னும், தமிழகத்திற்கான தண்ணீர் பகிர்வு தற்போதைய ஏற்பாட்டின்படி தடையின்றி தொடர்ந்து செயல்படும்” என சொல்லப்பட்டது.

இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம், அதை நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு மே 14ம் தேதியில் அனுப்பியது. இது தொடர்பான கூட்டத்தை மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு வரும் 28ம் தேதி நடத்த உள்ளது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் நேற்று காலை தமிழக எல்லையான லோயர் கேம்பில் இருந்து முல்லை பெரியாறு அணை நோக்கி பேரணியாக கிளம்பினர். ஆனால், விவசாயிகள் கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே வந்த போது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், முல்லைச் சாரல் விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து