முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்

திங்கட்கிழமை, 27 மே 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக அளவில் இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள இந்திய நாட்டில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றம் காண மிகவும் இன்றியமையாதது உயர்கல்வியாகும். அரசினால் வழங்கப்படும் உயர்கல்வியின் வாயிலாகவே இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தினையும் முன்னேற்றத்தினையும் கொண்டு வர இயலும் என்பதை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை வழங்கிடும் நான் முதல்வன் திட்டம், மாணவிகள் உயர்கல்வியினை தொய்வின்றித் தொடர மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம், மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் உங்களைத் தேடி உயர்கல்வி உள்ளிட்ட பல திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வித் தரத்திலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் முன்னணி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.

இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப் பல்கலைக்கழகங்களும் 500-க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளும், அதிக அளவிலான மருத்துவக் கல்லுரிகளும், புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அமையப்பெற்று தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்கி தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்த 4.0 தரநிலையை எய்திடும் பொருட்டு 3,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் முன்னோடித் திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது.

மாநிலத்திலுள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் நேரடி சேர்க்கை பெற்றுள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வியினைத் தொடர ஆண்டுதோறும் கல்விக் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகையாக ரூ.1,000/- கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணாக்கர்களை ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்துகின்ற வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையில் உதித்தத் திட்டமே ஆராய்ச்சி மானியத் திட்டமாகும்.

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பேராசிரியர்களைக் கொண்டு நிரப்பிடும் வரை மாணவர்களின் கல்வி பாதிக்காவண்ணம் தொகுப்பூதிய அடிப்படையில் 1,750-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளில் 27 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 கல்லூரிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டன. மேலும், 2 கல்லூரிகளில் கட்டடப் பணிகள் முடியும் தருவாயிலும், 23 கல்லூரிகளில் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையில் உதித்த பல்வேறு உன்னதத் திட்டங்கள் உயர்கல்வித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளதன் பயனாக, இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதோடு மட்டுமின்றி; ஏனைய பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து