முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க பொதுமக்களிடம் வரவு - செலவு கணக்குகளை விளக்கி சொல்ல வேண்டும் : கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க மக்களிடம் வரவு - செலவு கணக்குகளை விளக்கி சொல்ல வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

3-வது முறையாக... 

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளின் பொதுமக்களுக்கு சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது, கிராமங்கள்தான். உங்கள் ஆதரவோடு முதலமைச்சரான பிறகு, இப்போது 3-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.

பெண்கள் முன்னேற்றத்தில்.... 

உங்களில் நிறைய பேர் சுய உதவிக்குழுக்களால் பயனடைந்திருப்பார்கள். துணை முதலமைச்சராக இருந்தபோது, நானே பல மணிநேரம் மேடைகளில் நின்று சுழல்நிதி வழங்கியிருக்கிறேன். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகதான், மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறோம். நீங்கள் எல்லோரும் கட்டணமில்லாமல் பஸ்சில் செல்கிறீர்களே, அந்த விடியல் பயணத் திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு பெரிய பங்களிப்பை செலுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள்.

பல்வேறு திட்டங்கள்...

நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் காலேஜ் முடித்துவிட்டு வேலைக்குப் செல்வதற்கு தயாராக இருக்கின்ற அளவுக்கு – நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறோம். நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு துறையிலும், பல திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

தி.மு.க. அரசின் நோக்கம்...

இவையெல்லாம் முத்திரைத் திட்டங்கள். இதே போல, கிராம வளர்ச்சிக்கு என்று பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சிப் பாதையில், கிராம ஊராட்சியை கொண்டு செல்லவும், உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம். அதற்காக, ஆண்டுதோறும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தக் கிராம சபைக் கூட்டங்கள்தான், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்ற முக்கிய தருணம்.

சாதிப்பெயர்கள் இருந்தால்....

நம்முடைய கிராமங்களின் தற்போதைய தேவைகள், வளர்ச்சி இலக்குகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடியாக விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு விழாவாக கொண்டாடப்பட வேண்டும். நம்முடைய திராவிட மாடல் அரசு - சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்ட, சுயமரியாதை அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் இழிவான தன்மையோடு சாதிப்பெயர்கள் இருந்தால், அதை மாற்றி பொதுப் பெயர்களை சூட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், 'நம்ம ஊர், நம்ம அரசு' என்ற பெயரில், கிராம சபையில் மக்கள் கலந்தாலோசித்து, 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

2 லட்சம் வீடுகள் கட்ட...

குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிவிடும் வகையில், 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற புரட்சிகரத் திட்டம் துவங்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முடிவெடுத்து, 2024-25-ல் இதுவரை, 99 ஆயிரத்து 453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2025-26-ல், இன்றைய நிலையில், 78 ஆயிரத்து 312 வீடுகள் கூரை மட்டம் நிலைக்கு மேல் முன்னேற்றத்தில் இருக்கிறது.

தண்ணீர் பற்றாக்குறை...

மக்களுடைய முக்கிய பிரச்சனையாக இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை. "பணத்தைத் தண்ணியாக செலவழிக்கிறார்கள்" என்று சில பேர் சொல்லுவார்கள்… உண்மையில், "தண்ணியைத் தான் பணம் போல பார்த்து, பார்த்து செலவழிக்க வேண்டும்". தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருப்பதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானது. இதனால் தான், நிலத்தடி நீர்வளம் மேம்பட்டு, கிராமங்களுக்கு நீண்டகால நீர்ப் பாதுகாப்பு ஏற்படும். இதற்கான பொறுப்பு, நம்முடைய எல்லோரிடமும் தான் இருக்கிறது. எனவே, இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவசரத் திட்டங்களை...

அடுத்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வீதிகள், குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்.

நிரூபித்து காட்டுவோம்...

ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம். அடுத்து, நான் முக்கியமாக சொல்ல விரும்புவது - கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு – செலவு கணக்குகள் பொதுமக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்பட வேண்டும். "கிராமத்தின் வலிமை தான் மாநிலத்தின் வலிமை" என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம். இவ்வாறு முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து