முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2025      விளையாட்டு
Jaiswal 2024-02-17

Source: provided

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (87 ரன்) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார். போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே அவர் பெவிலியன் திரும்பினார். 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் இந்த ரன்னை எடுத்தார். அவர் ரன் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அவர் தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் முச்சதம் அடிக்கும் வாய்ப்பு கூட பிரகாசமாக இருந்தது. அதனையும் அவர் தவறவிட்டார் என்றே சொல்லலாம்.

________________________________________________________________________________________

இங்கிலாந்து கேப்டன் புதிய சாதனை 

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.  முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 117 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இந்த சதத்தின் மூலம், உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதங்கள் அடித்துள்ள வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் இது அவரது 5-வது சதமாகும்.

________________________________________________________________________________________

ஆஸி., தொடர் குறித்து ஜடேஜா

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும், அணியில் சேர்க்க முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகம் தன்னிடம் கூறியதாகவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகு ஜடேஜா பேசியதாவது: 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது என்னுடைய கைகளில் இல்லை. ஆனால், 2027 உலகக் கோப்பையில் நான் விளையாட விரும்புகிறேன். இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்தது போன்று வித்தியாசமாக யோசிக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம்பெறாததன் பின்னணியில் கண்டிப்பாக ஏதேனும் காரணம் இருக்கும் என்றார். 

________________________________________________________________________________________

தனித்தனியாக பேசிய லாரா

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் முன்னாள் வீரர் பிரையன் லாரா தனித்தனியாக பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களின் அறைக்குச் சென்றார். மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுடன் அவர் எந்த ஒரு பொதுவான ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி மற்றும் கேப்டன் ராஸ்டன் சேஸ் இருவருடனும் தனித்தனியாக பேசினார். மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் அறையில் அவர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிலை மற்றும் அதன் வளர்ச்சி குறித்து அவர் பொதுவான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து