முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவாஜி 3டி படத்தை பார்த்து பிரமித்து விட்டேன்: ரஜினிகாந்த் பேட்டி

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஆக.- 15 - நான் நடித்த சிவாஜி 3டி படத்தை பார்த்து பிரமித்து விட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.  ஏவிஎம் தயாரிப்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த படம் சிவாஜி. இந்த படத்தை கதை,  திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் ஷங்கர். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். இந்த படம் திரைக்கு வந்து அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது சிவாஜி படத்தை ஏவிஎம் நிறுவனமும், பிரசாத் ஸ்டூடியோவும் இணைந்து 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளனர். சுமார் 400 பேர் பணியாற்றி கடந்த ஒரு வருஷமாக தயாரித்திருக்கிறார்கள். சிவாஜி 3டி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் சிவாஜி 3டி படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல்  வெளியீட்டு நிகழ்ச்சி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், சாய்பிரசாத், அருணா குகன், அபர்ணா குகன், எஸ்.பி.முத்துராமன் என பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் ரஜினி கூறியதாவது:- சிவாஜி 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் விஷயம் எனக்கு தெரியாது. சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவுக்கு வர வேண்டும் என்று சரவணன் சார் கூறினார். என்ன என்று கேட்டேன். சர்ப்ரைசாக இருக்கட்டும் என்றார். சரி என்று கூறி, வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது சிவாஜி படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருப்பது. படத்தை பார்த்து என்னை மறந்து கைதட்டி விட்டேன். 3 முறை பார்த்து பிரமித்தேன். ஆண்டவன் என்னோடு இருப்பதை உணர்கிறேன். நான் என் வாழ்க்கையில் எதுவும் செய்யவில்லை. என்னை ஆண்டவன் தான் செயல்படுத்துகிறார்.
என்னோட கோச்சடையான் படம் 3டி-யில் உருவாகி வருகிறது. அதற்கு முன்பு இந்த படம் 3டி-யில் உருவாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு படம் 3டி-யில் உருவாக வேண்டுமானால் அது பிரமாண்டமான படமாக வந்திருக்க வேண்டும். அந்த வகையில் சிவாஜி இப்போது 3டி-யில் உருவாகி இருக்கிறது. அடுத்து இதுபோல 3டி-யில் நான் நடித்த படங்களை உருவாக்க வேண்டுமானால் எந்திரன், படையப்பா படங்களை உருவாக்கலாம். ஹாலிவுட் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு நம் சினிமாவின் தொழில்நுட்பம்  முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் பாடல் காட்சியை பார்த்த உங்களுக்கே பிடித்திருக்கிறது என்றால் நிச்சயம் என் ரசிகர்களுக்கும் அதிகம் பிடிக்கும். கருப்பு- வெள்ளை சினிமா, கலர் சினிமா, இப்போது டிஜிட்டல் சினிமாவில் இருப்பது  ஆண்டவன் கருணையால் நான் செய்த பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை கருப்பு கண்ணாடி அணிந்து நிருபர்களுடன் அமர்ந்து ரஜினி கண்டு களித்தார். 2 மணி 17 நிமிடம் சிவாஜி 3டி படம் திரையில் ஓடக்கூடிய வகையில் உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க்ச்ச்சி டூச்சிடீ
சிவாஜி 3டி படத்தை ரஜினி பார்த்தபோது எடுத்தபடம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony