இஸ்லாமாபாத், ஏப். 18 - பாகிஸ்தானில், மிரான்ஷா நகரில் மாணவர்களைப் பள்ளிக்கு செல்ல தடை விதித்திருப்பதாக தலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த வரிசிஸ்தான் பகுதியில் உள்ள மிரான்ஷா நகரில் இயங்கும் சோதனைச் சாவடி ஒன்றின் அருகே, சென்ற மாதம் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில், 24 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். எனவே பாதுகாப்பு கருதி, அரசுப்படையின் வீரர்கள் மிரான்ஷா நகரத்தின் தெரு ஒன்றினில் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
அதனை ஆட்சேபித்த தலிபான் இயக்கம், அந்தத் தடைகளை நீக்கும் வரை அங்குள்ள பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று அறிவித்துள்ளனர். அதனை மீறினால், தலிபான் குழு தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் மிரட்டியுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதோடு அல்லாமல், சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் நடவடிக்கைகளை மிகவும் பாதித்துள்ளது.
பெண்களும், சிறு வயதினரும் முக்கிய சாலைகள் வழியாகவும், சந்தைப் பகுதிகளிலும் செல்ல வேண்டியிருப்பதை இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு விரோதமானது என்னும் இந்தத் தீவிரவாதிகள், இத்தகைய விதிமீறல்களைத் தங்களுடைய குழுவும், பழங்குடியினரும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் எச்சரிக்கின்றது. ஹபிஸ் குல் பகதூர் என்ற இந்தத் தீவிரவாத இயக்கத்தின் தலைவர், அரசுடன் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னரும், இந்தத் தடை ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.