புதுவையில் முழு அடைப்பு - தனியார் பஸ்கள் ஓடவில்லை

pdy-Strike

 

புதுச்சேரி, ஏப்.28 - கவர்னர் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் முழுஅடைப்பு நடைபெறும் என அறிவித்திருந்தனர் அதன்படி நேற்று புதுவையில் முழுஅடைப்பு நடைபெற்றது. 

புதுவை கவர்னர் இக்பால்சிங் மீது மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. 

மருத்துவ கல்லுரி அனுமதி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கவர்னர் இக்பால்சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும். கவர்னரின் உறவினர் பெயரில் உள்ள சவுத் எஜூகேஷனல் டிரஸ்டுக்கு மருத்துவ கல்லூரி அமைக்க அமைச்சரவை ஒப்புதலின்றி தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. புதுவையில் முதல் குடிமகனான கவர்னர் பொதுமக்களின் நம்பிக்கை இழந்து விட்டார். எனவே அவர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்  மேலும் கவர்னர் பதவி விலக கோரி வருகிற 27ம் தேதி புதுவையில் உள்ள 4 பிராந்தியங்களிலும் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க, கம்யுனிஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி நேற்று புதுவையில் முழுஅடைப்பு நடைபெற்றது. பந்த் போராட்டம் காரணமாக புதுவையில் அதிகாலையில் இருந்தே தனியார் பஸ்கள் ஓடவில்லை. தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. 

புதுவை எல்லையில் இருந்து தமிழக அரசு பஸ்கள் பஸ்நிலையம் வரை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 

பந்த் போராட்டத்தை ஓட்டி புதுவையில் பெரும்பாலான டெம்போக்களும், ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். கோடை விடுமுறை என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஓரு சில தனியார் கல்லூரிகள் மட்டும் இயங்கின. கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியுற்றனர். 

நகர பகுதி முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சின்னமார்க்கெட், பெரிய மார்க்கெட், உழவர்சந்தை ஆகியவை இயங்கவில்லை

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ