2ஜி - அனைத்தும் பிரதமருக்கு தெரியும்: ஆ. ராசா

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 24 - அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நான் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தெரிவித்த பிறகே செயல்படுத்தினேன் என்று முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா மீண்டும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு 106 பக்கங்கள் அடங்கிய தன்னிலை விளக்க கடிதத்தை அவர் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் ராசா கூறியிருப்பதாவது, அலைக்கற்றை ஒதுக்கீடு பின்னணி முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து பிரதமருக்கு 2007 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி நான் கடிதம் எழுதினேன். 2007 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ம் தேதி வரை அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தும், கட்டண நிர்ணயம் ஏலமின்றி அலைக்கற்றை ஒதுக்கியது உள்ளிட்டவை குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்பு பிரதமர், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் விவாதித்துள்ளேன். 

அலைக்கற்றை ஒதுக்கியதில் நஷ்டம் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறுகிறார். ஆனால் எனது செயல்பாடு நஷ்டம் ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. தண்டிக்க முற்படும் போது இந்த அரசு ஏன் மவுனம் காக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை அரசியல் காரணங்களுக்காக பிரச்சினையை யார் மீதாவது சுமத்த வேண்டும் என்ற போக்குடன் அமைவதாக கருதுகிறேன். பல்வேறு அமைப்புகளின் கருத்து முரண்பாடுகளால் கடந்த 15 மாதங்களாக எனது தனி மனித சுதந்திரத்தை விலையாக கொடுத்தது தான் மிச்சம். நான் மேற்கொண்ட நடவடிக்கைக்காக என்னை மத்திய அரசு ஆதரித்து, சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை சரியா வழிநடத்தியிருந்தால் இது போன்ற நிலை வந்திருக்காது. 

எனக்கு நேர்ந்த தலைவிதி வேறு எந்த அமைச்சருக்கும் வரக்கூடாது. நான் எடுத்த நடவடிக்கைகளில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த வகையில் இந்த சர்ச்சைகள் வழக்கு ஆகியவற்றில் இருந்தும் மீள்வேன் என்று ராசா கூறியுள்ளார். ஜே.பி.சி. தலைவர் பி.சி. சாக்கோவுக்கும் ராசா தனியாக ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: