உ.பி. முதல்வருடன் ஆஸம்கானிடம் அமெரிக்க அதிகாரிகள் தனியே விசாரணை!

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்: ஏப், - 28 - உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் சென்ற அந்த மாநில அமைச்சர் ஆஸம் கான் விசாரணைக்காக அந்த நாட்டு அதிகாரிகளால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டார். இஸ்லாமியர் என்பதால் அவரை தனியே அழைத்துச் சென்ற அதிகாரிகள் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர். இதையடுத்து அவருக்கும் விசாரணை நடத்திய பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் விரைந்து வந்து ஆஸம் கானை விடுவித்து நிலைமை சமாளித்தனர். இந்த சம்பவத்தையடுத்து தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பப் போவதாக அஸாம் கான் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் இந்தியத் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் இந்தியர்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் அவமதிக்கப்படுவது புதிதல்ல. நாட்டின் தலைமகனாக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், விப்ரோ அதிபர் ஆஸிம் பிரேம்ஜி ஆகியோரையே சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்தியுள்ளது அமெரிக்கா. ஆனால், இதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் மத்திய அரசும் மெளனம் காத்துவிட்டது. ஆனால், ஆஸம் கான் ஒரு ஷார்ட் டெம்பர் தலைவர். இதனால் அவர் தன்னை விசாரித்த பெண் அதிகாரியை கடுமையாகத் திட்டியதாகத் தெரிகிறது. கடுப்பான அந்தப் பெண் அதிகாரி, நான் என் கடமையைச் செய்கிறேன். அதைத் தடுக்க முயன்றால் கேஸ் போடுவேன் என்று மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தையும் மத்திய அரசும் அமெரிக்கத் தூதரகமும் மூடி மறைக்க முயன்றிருக்கும். ஆனால், உடனடியாக இந்தியத் தூதரகம் தலையிட்டு இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளதற்குக் காரணம், அடுத்த ஆண்டு நடக்கப் போகும் மக்களவைத் தேர்தல் தான். சும்மாவே உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு சரிந்து போய் கரைந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ். வழக்கமாக காங்கிரஸ் வாக்கு வங்கியாக இருந்த முஸ்லீம்கள் சமாஜ்வாடி கட்சி பக்கம் போய்விட்டனர். இந் நிலையில் அந்தக் கட்சியின் இஸ்லாமியத் தலைவருக்கு அமெரிக்காவில் நடந்த இந்த அவமதிப்பை அந்தக் கட்சி அரசியல்ரீதியாக பயன்படுத்த எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இதைத் தவிர்க்கவே மத்திய அரசும் வழக்கமாக இது போன்ற விவகாரங்களில் மெளனம் காக்கும் அமெரிக்க இந்தியத் தூதரகமும் உடனடியாக செயல்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் ஆஸம் கான் சென்றிருந்து இது போல நடந்திருந்தால் கூட பரவாயில்லை. இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதல்வருடனான குழுவில் வந்துள்ள அவரை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் குழுவே பாஸ்டன் விமான நிலையத்துக்கு வந்திருந்தது. அவர்கள் ஒரு பக்கம் இந்தியக் குழுவை வரவேற்றுக் கொண்டிருக்க, ஒரு பெண் அதிகாரி வந்து, ஆஸம் கானை உங்களிடம் தனியே பேச வேண்டும் என்று கூறி ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று நீங்கள் யார், உங்கள் அப்பா பெயர் என்ன, எதற்காக அமெரிக்கா வந்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கவே, கடுப்பாகி அந்த அதிகாரியை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துவிட்டார் ஆஸம் கான் என்கிறார்கள். குரலை அதிகாரியும் உயர்த்த, இருவருமே உச்சக் குரலில் கூப்பாடு போடவே அகிலேஷ் யாதவுடன் வந்த அதிகாரிகள் இந்தியத் தூதரகத்திடம் கடுப்பான குரலில் பேச, உடனே தூதரகம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துடன் பேச, மூத்த அதிகாரிகள் வந்து ஆஸம் கானை மீட்டுள்ளனர். பாஸ்டன் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பங்களும் துப்பாக்கிசூடு சம்பவங்களும் நடந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை முலாயம் சிங் யாதவ் பெரிதாக்குவார் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை சமாஜ்வாடி கட்சி கிளப்பக்கூடும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: