முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரையிறுதியில் இந்தியா: மே.இ. தீவுகளை வென்றது

புதன்கிழமை, 12 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 13 - சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்  போட்டியின்   அரையிறுதிச் சுற்றுக்கு  இந்தியா  முன்னேறியுள்ளது. லண்டனில்  செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற   ஆட்டத்தில்   மேற்கீந்தியத்தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில்  இந்தியா   வென்றது.  தொடக்க வீரர் ஷிகர் தவன்  102 ரன்கள் எடுத்தார்.  ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை  வீழ்த்தினார்.  இவர்களின்  சிறப்பான  ஆட்டத்தால்  இந்தியா  மிக எளிதாக  வெற்றி பெற்றது.   அரையிறுதியையும்  உறுதி செய்தது.  முதலில் பேட் செய்த   மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு  233 ரன்கள் எடுத்தது.  அடுத்து விளையாடிய இந்தியா 39.1 ஓவர்களில்  2 விக்கெட் இழப்புக்கு 236  ரன்கள் எடுத்து வென்றது.  ஓவல் மைதானத்தில்  நடைபெற்ற   இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்ற   இந்திய கேப்டன்  தோனி முதலில் பந்து வீச  தீர்மானித்தார்.  இதையடுத்து  மேற்கிந்தியத் தீவுகளின் கெயில்,  சார்லஸ் ஆகியோர்  தொடக்க வீரர்களாக  களமிறங்கினர். தொடக்கம்  முதலே  கெயில் அதிரடியாக  விளையாட   முற்பட்டார்.  முதல் ஓவரிலேயே  இரு பவுண்டரிகளை விளாசினார்.  எனினும்  புவனேஸ்குமார் வீசிய 5​- வது  ஓவரில்  அஸ்வினிடம் கேட்ச்  கொடுத்து கெயில்  ஆட்டமிழந்தார்.   அவர் 18 பந்து களில்  21 ரன்கள் எடுத்தார்.  அடுத்து டேரன்  பிராவோ,  சார்லஸூடன்  ஜோடி சேர்ந்தார்.  இருவரும் சிறப்பாக   விளையாடினர்.  இதனால்  20 வது ஓவரில்  மேற்கிந்தியத் தீவுகள் அணி 100 ரன்களை எட்டியது.  55 பந்துகளில்  60 ரன்கள் எடுத்திருந்த  சார்லஸ், ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழ்ந்தார். சார்லஸ்  ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு திருப்புமுனையாக  அமைந்தது. அடுத்து வந்த சாமுவேல்ஸ்(1ரன்), சர்வான்  

(1ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்தியத்தீவுகளின்  ரன் எடுக்கும்  வேகம் குறைந்தது.  டேரன்  பிராவோ 35 ரன்களிலும்  கேப்டன்  டேயன்  பிராவோ 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  போல்லார்டு  32 பந்துகளில்  22 ரன்கள் எடுத்தார். ஆனால்  மறுமுனையில்  சமி நிலைத்து நின்றார்.  பின்வரிசையில்  சுநீல் நரேன், ராம்பால்  ஆகியோர் தலா 2 ரன்களில்  ஆட்டமிழந்தனர்.  இதனால்  45.3 ஓவர்களில்  மேற்கீந்தியத் தீவுகள்  9 விக்கெட் இழப்புக்கு  182 ரன்கள்  எடுத்திருந்தது. சமி அதிரடி : கடைசி விக்கெட்டுக்கு கேமர் ரோச், சமி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.  இதில் சமி அதிரடியாக  விளையாடினார்.  35 பந்துகளை  எதிர்கொண்ட  அவர்  4 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விளாசி 56 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில்  இருந்தார். மறுமுனையில்  ரோச் ரன் ஏதுமின்றி  களத்தில் இருந்தார்.  சமியின் அதிரடியால் கடைசி  5 ஓவர்களில்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு 51 ரன்கள் கிடைத்தது. 200 ரன்களைக் கூட எட்டாது  என்று  இருந்த  நிலை மாறி  50 ஓவர்களில்  9 விக்கெட்  இழப்புக்கு  233 ரன்கள் எடுத்தது மேற்கிந்தியத்தீவுகள்.  ஜடேஜா 5 விக்கெட்: இந்திய அணி தரப்பில்  ஜடேஜா 10 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்  வீழ்த்தினார். புவனேஸ்குமார்,  அஸ்வின்,  உமேஷ் யாதவ்,  இஷாந்த்  சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இந்தியா பதிலடி  :  இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் ஆட்டத்தை  தொடங்கினர்.  தொடக்க முதலே  இருவரும்  ரன் குவிப்பில்  ஈடுபட்டனர்.  இதனால்  16​- வது  ஓவரில்  இந்தியா  100 ரன்களைக் கடந்தது.  அதே ஓவரில் முதல் விக்கெட்  விழுந்தது.  ரோஹித் சர்மா 56 பந்துகளில்  52 ரன்கள்  எடுத்து  ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த கோலி 22 ரன்களில்  வெளியேறினார். பின்னர் ஷிகர் தவனுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.  இந்த ஜோடி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை  மிக நேர்த்தியாக எதிர்கொண்டு  விளையாடியது.  மழையால் தடைபட்டது:  இந்திய அணி 35.1 ஓவர்களில்  2 விக்கெட் இழப்புக்கு  204 ரன்கள் எடுத்த போது  மழை பெய்ததால், ஆட்டம் சிறிது நேரம்  தடைப்பட்டது. மீண்டும்  ஆட்டம்  தொடங்கிய  போது ஷிகர் தவான்  சிக்ஸர்  அடித்து சதத்தை எட்டினார்.  அவர் 107 பந்துகளில்  102 ரன்கள் எடுத்து  களத்தில்  இருந்தார்.  இதில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர்  அடங்கும். 40 ​- வது  ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக், பவுண்டரி அடித்து இந்திய அணியை  வெற்றிக்கு  அழைத்துச் சென்றார்.  அவர் 54 பந்துகளில்  51 ரன்கள்  எடுத்து களத்தில் இருந்தார்.  5 விக்கெட் வீழ்த்திய  ஜடேஜா ஆட்டநாயகனாக  அறிவிக்கப்பட்டார்.  இந்திய அணி  15 ​ - ம் தேதி  தனது கடைசி லீக் ஆட்டத்தில்  பாகிஸ்தானை சந்திக்கிறது. இரண்டாவது சதம்: 

இத்தொடரில் ஷிகர் தவன் தொடர்ந்து எடுத்துள்ள 2 ​ -   வது சதம்  இது. முதல் ஆட்டத்தில்  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 94 பந்துகளில்  114 ரன்கள் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்