முக்கிய செய்திகள்

நடிகர் ரவிச்சந்திரன் மறைவு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

புதன்கிழமை, 27 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூலை.- 27 - நடிகர் ரவிச்சந்திரன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- பழம்பெரும் நடிகர்  ரவிச்சந்திரன்,,  உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, இதயக்கமலம், அதே கண்கள் உட்பட சுமார் 180 திரைப்படங்களில் முத்திரை பதித்து, தமிழ் திரைப்பட ரசிகர்களால் வெள்ளி விழா நாயகன் என்று போற்றப்பட்டு, அவர்கள் மனதில் nullநீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர்  ரவிச்சந்திரன். 1964 ஆம் ஆண்டு தனது கலைப் பயணத்தைத் துவக்கி, சமீப காலம் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த  ரவிச்சந்திரனுடைய மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.  நடிகராக மட்டுமன்றி இயக்குநராகவும் பரிணமித்தவர் ரவிச்சந்திரன்.
ரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: