முலாயம்சிங்கிற்கு வீட்டுக்காவல் பாராளுமன்றத்தில் கடும் அமளி

புதன்கிழமை, 9 மார்ச் 2011      அரசியல்
mulayam-singh 0

 

புதுடெல்லி, மார்ச் - 9 - சாமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் அவரது மகன் அகிலேஷும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.  உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதி தலைமையிலான ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சிக்கு எதிராக 3 நாள் போராட்டத்தை நடத்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் முலாயம்சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோரை மாயாவதி அரசு வீட்டுக்காவலில் சிறைவைத்தது. முலாயம்சிங் வீட்டைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்தின் லோக்சபையில் நேற்று சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேச முடியாத அளவுக்கு உத்தரபிரதேச அரசு இந்த கடுமையான வீட்டுக்காவல் நடவடிக்கையை எடுத்துள்ளது என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். 

உத்தரபிரதேச மாயாவதி அரசுக்கு எதிராக இவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தங்களது இந்த முக்கிய பிரச்சனை குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அவர்கள் கேட்டுக்கொண்டனர். தங்களது தலைவர் முலாயம்சிங்கின் பாராளுமன்ற உரிமை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அப்போது வீட்டுக்காவலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டு லோக் சபைக்கு வந்த முலாயம்சிங் யாதவ் தன்னை பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் மீராகுமார், முலாயம் பேசுவதற்கு சிறிது நேரத்தை ஒதுக்கினார். தான் சொல்லவந்ததை சொல்லிவிட்டு கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி, சபாநாயகர் இந்த அனுமதியை அளித்தார். தன்னையும் தனது கட்சிக்காரர்கள் சிலரையும் உத்தரபிரதேச அரசு வீட்டுக்காவளில் வைத்தது என்றும், தங்களை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் அதனால் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்களின் இந்த பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எடுத்துக் கூறப்படும் என்று சபாநாயகர் மீராகுமார் உறுதியளித்தார். இதையடுத்து கேள்வி நேரம் தொடர்ந்து நடந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: